தமிழ்நாட்டில் இருவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் உண்மை அல்ல என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.
தினந்தோறும் ஒமிக்ரான் குறித்து வெளியாகும் செய்தி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிய மக்களை கடந்த நான்கு வாரங்களாக வடகிழக்கு பருவமழை புரட்டி எடுத்தது. இந்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்குள்ளேயே ஒமிக்ரான் எனும் அடுத்த ஆபத்து தமிழ்நாட்டு மக்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இன்று(டிசம்பர் 3) தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,” ‘ஹை ரிஸ்க்’ என்று பட்டியலிடப்பட்ட 11 நாடுகளிலிருந்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு முதலில் காய்ச்சல் பரிசோதனையும், அதனைத் தொடர்ந்து ஆர்டிபிசிஆர் சோதனையும் நடத்தப்படுகிறது. சோதனையின் முடிவில் நெகடிவ் என்று வந்தாலுமே வீடுகளில் 7 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் ரேண்டமாக 2 சதவிகிதம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அந்தவகையில் நேற்று இரவு வரை 1868 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை செலுத்த முடியாத விமான பயணிகளுக்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படும். சென்னையில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனை, மதுரை ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கோவை மருத்துவ கல்லூரி அரசு மருத்துவமனை, திருச்சி அரசு கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில் சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நானும், துறைச் செயலாளரும், அதிகாரிகளும் தொடர்ந்து விமான நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
இந்நிலையில் திருச்சி மற்றும் சென்னையில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் தவறான தகவலை பதிவிட்டு வருகிறார்கள். சிங்கப்பூரில் இருந்து வந்த ஒருவருக்கும், இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த 10 வயது சிறுமிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை ஒமிக்ரான் பாதிப்பு என்று கூறுவது தவறு. இவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் பயணித்த விமானத்தில் முன் இருக்கை பின் இருக்கையில் வந்தவர்கள், விமான பணிப்பெண்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதனால், தமிழ்நாட்டில் யாருக்காவது ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டால் உடனடியாக வெளிப்படையாக அறிவிக்கப்படும். எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. தொற்று ஏற்பட்டதை வெளியில் சொன்னால்தான் மக்களுக்கு விழிப்புணர்வும், எச்சரிக்கையும் ஏற்படும். அதனால், சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒமிக்ரான் குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை. விழிப்புணர்வுடன் இருந்தாலே போதுமானது. முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது போன்றவற்றை பின்பற்ற வேண்டும். தமிழ்நாட்டில் இதுவரை 80 சதவிகிதம் பேர் முதல் தவணையையும், 45 சதவிகிதம் பேர் இரண்டாவது தவணையையும் செலுத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்தும் பணி மக்கள் இயக்கமாக செயல்பட்டு வருகிறது. பூஸ்டர் தடுப்பூசித் திட்டத்தை ஒன்றிய அரசு தொடங்குமேயானால், தமிழ்நாட்டிலும் அதைப் பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.
**பள்ளிக் கல்வித் துறை**
ஒமிக்ரான் வைரஸ் அச்சம் காரணமாக பள்ளிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக இன்று பள்ளிக் கல்வித் துறை பிறப்பித்த உத்தரவில், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
பள்ளிகளில் உள்ள நீச்சல் குளங்களை மூட வேண்டும். இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது. ஆசிரியர்கள் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். வகுப்பறைகளிலும், பள்ளியிலும் தகுந்த இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-வினிதா**
�,