அமைச்சர் காமராஜின் உடல்நிலை குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தனர். தற்போது, அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அளவு படிப்படியாக குறைந்துகொண்டே வருகிறது. அதே சமயம் பிரிட்டனில் ஆரம்பித்த உருமாறிய கொரோனாவும் தமிழகத்தில் தற்போது பரவ ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் உணவுத் துறை அமைச்சரான காமராஜ் சில நாட்களுக்கு முன்பு திருவாரூரில் நடந்த பொங்கல் பரிசுப் பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதன்பிறகு அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அமைச்சர் காமராஜ் சென்னை மணப்பாக்கத்திலுள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அமைச்சரின் உடல்நிலை தொடர்பாக மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ப்ரித்வி மோகன்தாஸ் இன்று அறிக்கை வெளியிட்டார். அதில், “அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு ஜனவரி 5ஆம் தேதியன்று சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். அவரது சிடி ஸ்கேன் இயல்பாக இருக்கிறது. அமைச்சருக்கு தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை” என்று தெரிவித்தார்.
சாதாரண ஒரு அறைக்காற்றில் கிடைக்கப்பெறும் ஆக்சிஜன் அளவே அவருக்கு போதுமானதாக இருக்கிறது. வேறு எந்தவிதமான கூடுதல் ஆக்சிஜன் துணையும் அவருக்கு தேவைப்படவில்லை. அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் எனவும் மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
**எழில்**�,