பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவின் இல்லம் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை பரபரப்பானது. செய்தி மற்றும் விளம்பரத் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கலெக்டர் வீட்டுக்கு இரவு உணவு சாப்பிட வருகிறார் என்பதுதான் அந்தப் பரபரப்புக்கான காரணம். தூத்துக்குடியிலிருந்து வந்த அமைச்சர், கலெக்டர் இல்லத்தில் டின்னர் முடித்துவிட்டு அங்கிருந்து சென்னைக்குக் கிளம்பிவிட்டார்.
அமைச்சர் கடம்பூர் ராஜுவும் கலெக்டர் சாந்தாவும் உறவினர்கள். அந்த வகையில்தான் சென்னை செல்லும் வழியில் பெரம்பலூரில் கலெக்டர் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து பேசிவிட்டு இரவு டின்னர் சாப்பிட்டுவிட்டுச் சென்றார் என்கிறார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள்.
இதனிடையே ஜூலை 24ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் 11 செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பெரம்பலூர் மாவட்ட பி.ஆர்.ஓ பாலசுப்பிரமணியன் சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய நாகராஜ பூபதி பெரம்பலூர் மாவட்டத்தில் பணியமர்த்தப்பட்டார்.
பெரம்பலூர் கலெக்டர் சாந்தாவுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்கனவே பி.ஆர்.ஓ ஆக இருந்த பாலசுப்பிரமணியன் சிறப்பாக செய்துகொடுத்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்துவருகிறது. மாற்றலாகி சென்னை செல்ல இருந்த பாலசுப்பிரமணியன் கார் பழுதடைந்ததால், தான் பயன்படுத்தி வந்த கார்களில் ஒன்றை அவருக்குக் கொடுத்து அனுப்பியுள்ளார் கலெக்டர் சாந்தா.
பெரம்பலூர் பி.ஆர்.ஓ ஆக பதவியேற்று இரண்டு வருடங்கள்தாம் ஆகிறது என்பதால், பாலசுப்பிரமணியன் மாற்றத்தை ரத்து செய்து, அவரை மீண்டும் பெரம்பலூருக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் சாந்தாவின் கோரிக்கையாக இருந்தது. நாகராஜ பூபதியிடம்கூட ‘நீங்கள் தற்போது பதவியேற்க வேண்டாம், கொஞ்சம் காத்திருங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் வேண்டியவரான நாகராஜ பூபதி, பி.ஆர்.ஓ ஆக பொறுப்பேற்றுக் கொண்டுதான் கலெக்டரையே சந்திக்கச் சென்றுள்ளார்.
இந்தச் சூழலில் கலெக்டர் வீட்டுக்குச் செய்தித் துறை அமைச்சரே நேரில் வந்து சாப்பிட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். அதனால் பழைய பி.ஆர்.ஓ பாலசுப்பிரமணியனே மீண்டும் பெரம்பலூர் வரலாம் என்கிறார்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்களில்.
**எழில்**�,