அன்வர் ராஜா பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகிய நிலையில், ஆளும் அதிமுக கூட்டணியை விட திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களில் ஆளுங்கட்சியே அதிக இடங்களில் வெற்றிபெற்று வந்த நிலையில், அந்த வழக்கத்தை இந்தத் தேர்தல் முறியடித்துள்ளது. அதிமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததுதான் என அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவரான அன்வர் ராஜா வெளிப்படையாகவே பேட்டியளித்தார். மேலும், தோல்வியடைவார்கள் என்று தெரிந்தும் தனது மகனையும், மகளையும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் இன்று (ஜனவரி 4) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம், அதிமுகவின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், திமுக மகத்தான வெற்றியை எல்லாம் பெறவில்லை என்று குறிப்பிட்டார்.
மேலும், “அதிமுக என்பது வளர்பிறை, திமுக தேய்பிறை என்பதைத்தான் இந்தத் தேர்தலில் மக்கள் உணர்த்தியிருக்கின்றனர். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றது. மக்களவைத் தேர்தலில் 48 சதவிகிதமாக இருந்த திமுகவின் வாக்கு வங்கி, தற்போது குறைந்துவிட்டது. 18 சதவிகிதமாக இருந்த அதிமுகவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது” என்று குறிப்பிட்ட அமைச்சர் அப்படியென்றால் அதிமுக வளர்ந்திருக்கிறது என்றுதானே அர்த்தம். ஆகவே, இதனை எங்களுக்குத்தான் மகத்தான் வெற்றியாக கருத முடியும். 2021ஆம் ஆண்டு அதிமுகதான் அரியணையில் ஏறும் என்பதை தமிழக மக்கள் உணர்த்தியிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
சிஏஏவை ஆதரித்ததால்தான் அதிமுக தோல்வியடைந்துள்ளதாக அன்வர் ராஜா கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, “அவர் எனக்கு மிகவும் வேண்டிய நண்பர்தான். கட்சி என்று இருந்தால் தலைமை எடுக்கும் முடிவுக்கு தொண்டர்கள் முதல் தலைமைக் கழக நிர்வாகிகள் வரை அனைவரும் கட்டுப்பட வேண்டும். கட்சியில் இருந்துகொண்டு கட்சியை விமர்சிக்கக் கூடாது. கட்சிக்கு உள்ளே விமர்சனங்களை வைக்கலாமே தவிர, பொதுவெளியில் விமர்சனங்களை வைக்கக் கூடாது” என்று பதிலளித்துள்ளார்.
�,