தமிழக அமைச்சர் ஒருவரின் உறவினர்கள், “எங்களுக்குச் சொந்தமான இடத்தில் எங்களை உள்ளேவிடாமல் ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார்கள்” என்று காவல்நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார்கள்.
விருத்தாசலம் முன்னாள் அதிமுக பிரமுகர் டாக்டர் இளவரசன், மங்கலம்பேட்டை அருகில் பெரியவடவாடி என்ற ஊரில் செந்தில் கல்வி அறக்கட்டளையைத் துவக்கினார். அந்த அறக்கட்டளை இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது.
பள்ளியில் 1,650 மாணவ மாணவிகளும், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 320பேரும், மருந்தகப் படிப்பில் 40 பேர் படித்துவருகிறார்கள். இந்தப் பள்ளி பற்றித்தான், நேற்று முன்தினம் டிசம்பர் 16ஆம் தேதி, அமைச்சர் எம்.சி.சம்பத்துடைய மச்சான் மனைவி கவிதா (வயது 42 க/பெ தங்கராசு) என்பவர் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகாரில், “எங்கள் பள்ளிக்கு எங்களை உள்ளேவிடாமல் இளவரசன் அவரது மனைவி சந்திரவடிவு, மகன் செந்தில், ஆனந்த் உட்பட 200 பேர் அடியாட்களை வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்’ என்று கூறியிருக்கிறார்.
புகார் வாங்கிய காவல்துறையினர் மேலிடத்துச் சமாச்சாரம் என்பதால் உடனடியாக வழக்கு பதிவுசெய்தார்கள். (குற்ற எண் 290/ 2019 செக்ஷன் 452, 294(b) 341, 506 ஐபிசி)
புகார் கொடுக்கும் அளவுக்கு என்னதான் நடந்தது, யார் அந்த இளவரசன் என்று விசாரித்தோம்.
டாக்டர் இளவரசன் அதிமுகவிலிருந்தார், திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பேத்தியை இளவரசன் மகனுக்கு திருமணம் செய்ததால், அப்போதிருந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இளவரசனைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார். பிறகு ரஜினி மன்றத்தில் சேர்ந்து அங்கிருந்தும் நீக்கப்பட்டார்.
இளவரசன் நடத்திவரும் கல்வி அறக்கட்டளையில் அமைச்சர் குடும்பத்தினர் இயக்குநர்களாக இருந்துவருகிறார்கள், முதலீடும் செய்துள்ளதாகச் சொல்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு அமைச்சர், டாக்டர் இளவரசனின் கல்வி நிறுவனத்தை வாங்கிவிட்டார் என்றும் செய்திகள் பரவின..
அமைச்சர் குடும்பமும் டாக்டர் குடும்பமும் இணக்கமாக இருந்துவந்த நிலையில்தான், சமீபகாலமாக இரு குடும்பத்திற்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது,
அமைச்சர் மகள் திவ்யா அடிக்கடி செந்தில் கல்வி அறக்கட்டளைக்குச் சென்று நிர்வாகத்தைப் பார்த்துவந்ததாகவும் சொல்கிறார்கள். கடந்த சில மாதங்களாக அமைச்சர் மச்சான் தங்கராசு, சகலை வைத்தியலிங்கம், சகலை மகன் பிரசன்னா, அமைச்சர் மகள் திவ்யா, பள்ளிக்குக் காலையில் வருவது, மாலையில் போவதுமாக இருந்தார்கள். நேற்று முன்தினம் டிசம்பர் 16ஆம் தேதி, இளவரசன், திட்டமிட்டு பெற்றோர் மீட்டிங் என்று வெளியாட்களையும் அழைத்துக் கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு பள்ளி கல்லூரி வளாகத்தின் மெயின் கேட்டை பூட்டிவிட்டதாக சொல்கிறார்கள்.
அமைச்சர் மச்சான் அவர் மனைவி மற்றும் உறவினர்கள் காரில் பள்ளிக்குச் சென்றபோது கேட்டை திறக்கவில்லை. கேட்டை தட்டியும் சத்தம்போட்டும் திறக்கவில்லை. ஒரு கட்டத்தில் உள்ளேயிருப்பவர்களும் வெளியில் இருப்பவர்களும் வாய் வார்த்தைகளை அள்ளி வீசிக் கொண்டார்கள்.
இதையடுத்தே அமைச்சர் மச்சான் தங்கராசு அவர் மனைவியை அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மங்கலம்பேட்டை காவல்நிலையம் உதவியை நாடி கேட்டை திறக்கச் சொல்லியிருக்கிறார், போலீஸ் முயற்சி எடுபடாத நிலையில், புகார் கொடுத்தது வழக்கு பதிவுசெய்துள்ளனர்.
மோதலுக்கான காரணங்களை தெரிந்துகொள்ள டாக்டர் இளவரசனைத் தொடர்புகொண்டு கேட்டோம்.
“என் தந்தை ஒரு ஆசிரியர். அதனால் அவர் நினைவாக மக்களுக்குக் கல்விச் சேவை செய்யவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் 2003இல், செந்தில் கல்வி அறக்கட்டளையைத் துவங்கி அதன் தலைவராக நான் இருந்துவருகிறேன். 2011ஆம் ஆண்டில் எம்.சி.சம்பத் எங்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் என்றார். சரி என்று சேர்த்துக்கொண்டேன். இப்போது அவர் மகள் திவ்யாவுக்கு விட்டுக்கொடுங்கள் அவருக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றார். அதுமுடியாது என்றேன். அதனால் அதிகாரத்தைப் பயன்படுத்தி எனது கல்வி அறக்கட்டளையைப் பிடுங்க முயற்சிக்கிறார்” என்றவரிடம், “இதில் அமைச்சர் முதலீடு செய்துள்ளதாகச் சொல்கிறார்களே?” எனக் கேட்டோம், “ அதெல்லாம் இல்லை” என்றார்.
அமைச்சர் எம்.சி.சம்பத்தையே சந்தித்து இந்த சர்ச்சை பற்றிக் கேட்டோம். சிரித்தபடி,
“ உலகத்தில் நன்றி இல்லாதவர்கள் அதிகரித்துவருகிறார்கள். அதில் ஒருவர்தான் அந்த இளவரசன். அவர் கிளினிக்கில் ஒரு பையனுக்குத் தவறாக ஊசிபோட்டு இறந்துபோய்விட்டார். அந்த வழக்கில் சிறைக்குப் போகக்கூடியவரை, நான் காப்பாற்றினேன். அவர் மனைவி சந்திரவடிவு அரசு மருத்துவமனையில் பணியாற்றியபோது பதவிநீக்கம் செய்துவிட்டார்கள், அவரை காப்பாற்றி மீண்டும் பணியில் இணையவைத்தேன். அவர் பிள்ளைக்கு இலவசமாக டாக்டர் சீட் வாங்கிக் கொடுத்தேன். இன்னொரு பிள்ளைக்கு எம் டி சீட் வாங்கி கொடுத்தேன். அவர் குடும்பத்திற்குப் பல உதவிகள் செய்தேன். அப்போது அவர் குடும்பம் எங்களைக் கடவுளாகப் பார்ப்பதாகச் சொன்னார்கள்.
அந்த கல்வி நிறுவனத்திற்கு எங்கள் பணம் இல்லாமல் எப்படி இயக்குநராக சேர்ப்பார்? இவ்வளவு நாள் நிர்வாகத்தைக் கவனித்துவந்தார்களே? அப்போது எங்கே போனார்கள்? அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. , முழு பூசணிக்காயைத் தட்டு சோற்றில் மறைக்க நினைக்கிறார் இளவரசன். ஏமாற்ற நினைப்பவர்கள் உருப்படமுடியாது சட்டப்படி பார்ப்போம். அந்த டாக்டர் அடியாட்களை வைத்து மிரட்டிப் பார்க்கிறார் ” என்று ஆவேசப்பட்டார்.
அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம். “அமைச்சர் முதலீடு செய்தது உண்மை. இன்று எந்த அரசியல்வாதிகளும் எந்த தொழிலிலும் நேரடியாக முதலீடு செய்வதில்லை. மறைமுகமாகப் பினாமிகள் பெயரில்தான் முதலீடு செய்துவருகிறார்கள். அதில்தான் சிலர் ஏமாற்றி ஆட்டையை போடநினக்கிறார்கள்.
கடலூரிலும் வெளியூரிலும் பினாமிகள் பெயரில் சொத்து வாங்கியிருந்தார் அமைச்சர் சம்பத். அதில் பலர் ஏமாற்றிவிட்டார்கள். இப்போது இளவரசனும் ஏமாற்ற நினைக்கிறார். அவருக்கு ஆதரவாக அதிமுக பிரமுகர் ஒருவரே இருப்பதாகச் சொல்கிறார்கள். செந்தில் கல்வி அறக்கட்டளை சுமார் 900 கோடிக்கு மதிப்பு என்கிறார்கள் இந்த சொத்துகள் எப்படி வந்தது என்று விரைவில் வெளியில் வரும்” என்கிறார்கள்..
�,”