நீலகிரி: பிளாஸ்டிக் தடையை மீறி அமைச்சரின் வாட்டர் பாட்டில்!

Published On:

| By Balaji

பிளாஸ்டிக் தடையை கடுமையாக பின்பற்றிவரும் நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யப்படும் குடிநீர் மற்றும் குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வனத்துறை அமைச்சரே உத்தரவை மதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் முதல் உயிர்ச்சூழல் மண்டலமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட நீலகிரி‌‌ மலைகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக உள்ளன. நீலகிரியில் அதிகரித்துவரும் மக்கள்தொகைப் பெருக்கம், சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக‌ சூழலியலில் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்த கடந்த 20 ஆண்டுகளாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒருகட்டமாகவே நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு உள்ள குடிநீர், குளிர்பானங்களை விற்பனை செய்ய தடை விதித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். இந்த உத்தரவை மீறி பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள குடிநீர், குளிர்பானங்களை விற்பனை செய்தாலோ அல்லது பயன்படுத்தினாலோ அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும், பொதுவெளிகளில் மக்களின் குடிநீர் தேவைக்காக பல இடங்களில் வாட்டர் ஏடிஎம்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் நீலகிரி மாவட்டத்தில் குடிநீருக்காக பிளாஸ்டிக் பாட்டில்களைப் பயன்படுத்துவது கணிசமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில் குடிநீரைப் பயன்படுத்தி வருவது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சமீபத்தில் கூடலூரில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றின் போதும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்‌களில் குடிநீரை வைத்திருந்த போட்டோ மற்றும் வீடியோவை சமூக வளைதளங்களில் பதிவு செய்து கடுமையான விமர்சித்து வருகின்றனர் நீலகிரி மக்கள்.

அமைச்சரின் இந்த செயல் குறித்து சூழலியல் செயற்பாட்டாளர்கள், “சமீபத்தில் கூடலூர் நாடுகாணி பகுதியில் நடந்த வன உயிரின வார விழாவில் பங்கேற்ற அமைச்சர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீரைப் பயன்படுத்தியது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள முடியாத ஒன்று. மற்ற‌ அனைவரையும் விட சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முன்னோடியாக இருக்க வேண்டிய பொறுப்பு வனத்துறை அமைச்சருக்கே உள்ளது. அதுவும் இவர் இதே மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் நபர். பொறுப்பில் இருக்கும் அமைச்சரே இப்படி உத்தரவை மதிக்காதது வேதனையாக உள்ளது” என்கின்றனர்.

இந்த சர்ச்சை குறித்து வனத்துறை அமைச்சர் தரப்பில், “பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டுள்ள குடிநீரை நாங்கள் எடுத்துச் செல்வதில்லை. ஆனால், நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்கிறவர்கள் வைத்து விடுகிறார்கள்” என்கின்றனர்.

மாவட்ட நிர்வாகம், இந்த விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்பதே, சுற்றுசூழல் ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது.

**-ராஜ்**

.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share