தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கை திரும்பி வந்து கொண்டிருக்கிறது. அதற்குள் உருமாறிய ஒமிக்ரான் எனும் தொற்று தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் பரவி பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒமிக்ரான் பரவலால் மீண்டும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுபோன்று பாகுபாடு இன்றி சாதாரண மக்கள்,திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அமைச்சர் சாமிநாதனின் நேர்முக உதவியாளர் செல்லமுத்து என்பவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அவருடன் தொடர்பில் இருந்த அமைச்சருக்கும் லேசான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் சாமிநாதன் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தொடர்ந்து அமைச்சரின் தொடர்பில் இருந்த பிற உதவியாளர்கள் மற்றும் அலுவலகத்தில் இருந்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
திமுக சுற்றுச்சூழல் அணி மாநிலச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி ட்விட்டரில், ‘காங்கயம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், தமிழக செய்தித்துறை அமைச்சருமான மு.பெ.சாமிநாதன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து வேதனை அடைந்தேன். அவர் விரைவில் முழுமையாக நலம் பெற்று, மக்கள் பணியைச் சிறப்புடன் தொடர வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.
**-வினிதா**
�,