பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 1978ஆம் ஆண்டு வரை பெண்களின் திருமண வயது 15 ஆக இருந்தது. இதை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததையடுத்து, சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு பெண்களின் திருமண வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டு தற்போதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.
கடந்தாண்டு சுதந்திர தினத்தன்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி ”நாட்டில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. பரிசீலனையில் உள்ள அத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும்” என்று தெரிவித்திருந்தார்.
அதுபோன்று கடந்தாண்டு பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,” பெண்களின் திருமண வயதை உயர்த்துவது குறித்து ஒரு குழு அமைத்து பரிசீலனை நடத்தப்படும். ஊட்டச்சத்து குறைப்பாடு, மகப்பேறு உயிரிழப்புகளை தடுப்பதற்கு பெண்களின் திருமண வயது உயர்வு தேவை” என்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஜெயா ஜெட்லி தலைமையிலான நிதி ஆயோக் பணிக்குழு அமைக்கப்பட்டது. இக்குழு பல்வேறு கட்ட ஆய்வுகளையும், பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துகளையும் பெற்று ஆய்வு மேற்கொண்டு மத்திய அரசிடம் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது. அதில், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18லிருந்து 21ஆக நிர்ணயிக்கலாம். இதன் மூலம் பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான முன்னேற்றங்கள் அதிகரிக்கும். ஒரு பெண் தாய்மை அடைவதற்கான வயது 21 ஆக இருப்பது மனதளவிலும், உடலுளவிலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் தாய்-சேய் சத்துக் குறைபாடு மற்றும் உயிரிழப்புகளை தடுக்க முடியும். இந்த வயது அதிகரிப்பு பெண்களுக்கு மட்டுமில்லாமல், பிறக்கும் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் முன்னேற்றம் ஏற்படும். இந்த முடிவை சமூக ரீதியாக ஏற்றுக்கொள்வதை ஊக்குவிக்க, ஒரு விரிவான பொது விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்று அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது.
இந்த நிலையில், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18லிருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா கொண்டுவரப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பெண்களின் திருமண வயது உயர்வுக்கு அனைவரும் குறிப்பாக பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில், “பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் இந்தப் புரட்சிகர் முடிவு பெரிதும் உதவும்.
உலக அளவில் இந்தியப் பெண்கள் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இளம் வயது திருமணமும், தாய்மையும்தான் காரணம் ஆகும். பெண்கள் திருமணம் குறித்து முடிவெடுக்கும் பக்குவத்தை அடைய 21 வயது நிறைவடைய வேண்டியது அவசியமாகும்.
இவற்றைக் கருத்தில் கொண்டுதான் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக பாமக வலியுறுத்தி வந்தது. கர்நாடக உயர் நீதிமன்றமும் பெண்களின் திருமண வயதை 21ஆக உயர்த்தப் பரிந்துரை அளித்திருந்தது.
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்பதை பிரதமரும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருந்தார். இப்போது சட்டமே தயாராகி விட்டது. இதற்கான சட்ட முன்வரைவு நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டால் அது பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
**-வினிதா**
�,