புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் எடுத்த முயற்சி மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் வேலையின்றியும், உணவுக்கு வழியில்லாமலும் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். ஆயிரக்கணக்கான கி.மீ தூரம் நடந்து தங்களது சொந்த மாநிலங்களை நோக்கி முன்னேறினர். அப்படி சென்றவர்களில் ரயில் மோதியும், சாலை விபத்திலும் பலர் பலியாகினர். இதனையடுத்துதான், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த நிலையில் தமிழகத்திலிருந்து சென்று மும்பையில் பணியாற்றிய புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் சிரமத்தில் இருந்ததை அறிந்து, ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் தனது முயற்சியின் மூலம் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைத்துள்ளார். இதனை இயக்குனர் சுசி கணேசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவு செய்துள்ளார்.
“மும்பையில் இட்லி வியாபாரம் செய்யும் மதுரை, விருதுநகரைச் சேர்ந்த சுமார் 90 தமிழர்கள் கொரோனா காரணமாக தொழிலை இழந்து ஊர் திரும்புவதற்கு அவசர பாஸ் வாங்குவதற்கு மிகவும் சிரமப்படுவதாக நண்பர் கோவிந்தன் தொடர்பு கொண்டு கவலையோடு பேசினார் . உதவுவதற்கு இங்கே ஒருவர் இருக்கிறார். உடனே விவரங்களை அனுப்புங்கள் என்றேன் . அந்த ஒருவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றும் அன்பழகன். என் செய்தி கிடைக்கப்பெற்றதும் அடுத்த நொடி , அவரிடம் இருந்து வந்த செய்தி – ‘Please send me the token number bro’ என்பதுதான்.
அரசின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துகிற முக்கிய துறைகளின் ஒன்றான MIDC – CEO வேலைகளுக்கு நடுவே அவர் காட்டிய வேகம் என்னை பிரமிக்க வைத்தது. . தமிழக அரசு அதிகாரிகளோடு தொடர்புகொண்டு அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அழைப்பு: “சார், 3 பஸ் வந்துவிட்டது .. எல்லோரும் ஏறி அமர்ந்து விட்டார்கள். மிகவும் கலக்கத்தோடு இருக்கிறார்கள். சீக்கிரம் கிளம்பாவிட்டால், டிரைவர்கள் கிளம்பி விடுவார்கள்” என்று கூறினர்.
மீண்டும் அன்பழகன் ஐஏஎஸ்ஸுக்கு வாட்ஸ் ஆப் செய்தேன். கொஞ்சம் கவலை தொற்றிக்கொள்ள என்ன செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்த பத்தாவது நிமிடத்தில் , சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. “சார் பாஸ் கிடைத்து விட்டது . எல்லோரும் கிளம்புகிறார்கள்” என்று சந்தோஷமாக நன்றி சொன்னார்கள். வந்த நன்றிகளை அன்பழகனுக்கு திருப்ப வாட்ஸ் ஆப்பை திறந்தால் – 3 பஸ் பாஸ்களை எனக்கு பார்வர்ட் செய்திருந்தார் . வாயாற நன்றி சொல்லிவிட்டு தூங்கப் போனேன் .
கதை இங்கே முடியவில்லை என்பது, அடுத்த நாள் விடியும் போதுதான் தெரிந்தது . அதே கோவிந்தன் மீண்டும் பதட்டமான குரலில் பேசினார் … ” பாஸ் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் , எல்லோரும் சொந்த ஊர்களுக்கு கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்போதே, எதோ ஒரு வித பயம் காரணமாக டிரைவர்கள் 3 பஸ்ஸையும் எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்கள்( போய்விட்டார்கள்). என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறோம் … திரும்பவும் 3 புதிய பஸ்களை ஏற்பாடு செய்கிறோம் … இன்றே பாஸ் வாங்கி இவர்களை இன்றே அனுப்பாவிட்டால் மீண்டும் நேற்றைய நிலைமை ஏற்பட்டுவிடும்…பழைய பாஸ் பயனில்லாமல் போய்விட்டது “என்றார் .
பாஸ் என்பதை தாண்டி, பஸ்ஸிலிருந்து இறக்கிவிடப்பட்டவர்களின் பதைபதைப்பும் , விடை தெரியாத மனக்குழப்பமும் கண்ணில் ஆடியது . மீண்டும் நடந்து விட்ட சோகத்தை அன்பழகனுக்கு விவரித்தேன், அயரவில்லை அவர். மீண்டும் அனுப்புங்கள் என்றார் . மீண்டும் 3 பஸ்களின் details-ஐ அனுப்பினேன் . ..அவரது பதில் : Will send it immediately ….மீண்டும் நேற்றைய நடைமுறைகள்… கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற பதட்டம் இந்த பக்கம் .
We can get it.. I will send the details to State Nodal Authority என்று அந்த பக்கம் அந்த அவர் ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தார். இரண்டு மணி நேரத்தில் , ” பாஸ் கிடைத்துவிட்டது… மதுரைக்கும் , விருதுநகருக்கும் மக்கள் கிளம்புகிறார்கள் ” என்றதும் , இரண்டாவது முறை நன்றி சொல்வதற்காக மீண்டும் அழைத்தேன் .. .. பிஸி … பிறகுதான் தெரிந்தது – புனேயிலிருந்து ரயிலில் கிளம்பும் 1200 தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தனை உதவிகளையும் செய்துகொண்டிருந்தார் என்பது. பிறகு அவரிடம் பேசியபோது, நீங்கள் கேட்டதும், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரி பூஜா கிர்லோஷுக்கு உங்கள் மெசேஜை பார்வேட் செய்தேன். அவர் உடனடியாக உதவினார். அவருக்குத்தான் நீங்கள் நன்றி சொல்ல வேண்டும் என்றார்
ஐ. ஏ.எஸ் என்பது கவர்ச்சியான பதவி அல்ல. களம் இறங்கி செய்யும் பதவி என்பதை மனதில் ஆழமாய் பதிய வைத்த சம்பவம் இது … நன்றிகள் பல அன்பழகன் அன்பழகன் bro” என்று அனைத்தையும் விரிவாக பதிவு செய்து பாராட்டியுள்ளார்.
**எழில்**�,”