~ஆர்.எஸ்.பாரதியின் இடைக்கால ஜாமீனை ரத்துசெய்யக் கோரிய காவல் துறையின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பட்டியலின மக்களை விமர்சித்துப் பேசியதாக பிப்ரவரியில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், திமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி கடந்த 23ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கை மீதான ரிமாண்டை ஜூன் 1ஆம் தேதி வரை நிறுத்திவைத்தும், அதுவரை இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டதால் உடனே விடுவிக்கப்பட்டார்.
ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை குற்றப்பிரிவு போலீசார் தரப்பிலிருந்து உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதுபோலவே, சரண் அடையும் நாளிலேயே தனது ஜாமீன் மனுவைப் பரிசீலிக்க கோரி ஆர்.எஸ்.பாரதி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் நேற்று (மே 30) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுத்துவிட்டார். ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல் துறை தரப்பில் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். மேலும், ஆர்.எஸ். பாரதி சரணடையும் தினத்தில் ஜாமீன் மனுவை பரிசீலிக்க முதன்மை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
**எழில்**�,