தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு!

Published On:

| By Balaji

தஞ்சையில் எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள சிலைகள் சேதப்படுத்தப்படுவது என்பது ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், வடக்குவீதியில் மார்பளவிலான எம்.ஜி.ஆர் சிலை அமைக்கப்பட்டிருந்தது.

15 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட இந்த சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் நள்ளிரவில் உடைக்க முயன்றுள்ளனர். ஆனால் உடைக்க முடியாததால், சிலையை அப்படியே பெயர்த்துப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் சிலை இல்லாதது அருகிலிருந்த டீ கடைக்காரருக்குத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து இந்த தகவல் பரவியதால், சிறிது நேரத்திலேயே சம்பவ இடத்தில் அதிமுகவினர் குவிந்தனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவியது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை தெற்கு காவல் துறையினர் அங்கிருந்த பெட்டிக் கடையின் பின்புறம் எம்ஜிஆர் சிலையைக் கண்டெடுத்து மீண்டும் அதே இடத்தில் நிறுவினர். தற்போது சிலையை யார் உடைத்தது என்று அதிமுக அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சிலை உடைக்கப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, “ஏழை எளியோர் பசி தீர்த்த வள்ளல், தமிழக மக்கள் இதயங்களில் என்றென்றும் நீங்கா புகழ் கொண்டிருக்கும் இதயக்கனி எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலை தஞ்சை வடக்கு வீதியில் சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன். எம்.ஜி.ஆர்.புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் பொது அமைதியைச் சீர்குலைக்க நினைப்போர் மீது மிகக்கடுமையான சட்ட நடவடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share