எம்ஜிஆர் எனக்கு பெரியப்பா: ஸ்டாலின் ஃப்ளாஷ்பேக்

politics

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பரப்புரை நிகழ்ச்சிக்காக மக்களிடம் புகார் மனுக்களைப் பெற இன்று (ஜனவரி31) திருவள்ளூர் மாவட்டம் நசரேத்பேட்டைக்கு வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

புகார் மனுக்களைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய அவர், “நேற்று முன்தினம் இதேபோல, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்“ நிகழ்ச்சிக்கு ஆரணிக்கு சென்றிருந்தேன். அந்த ஆரணியில் நீங்கள் இப்போது பேசியதுபோல, எழிலரசி என்ற சகோதரியைப் பேச வைத்தோம். அப்போது அவர் சிலிண்டர் வெடித்ததில் எங்கள் அம்மா இறந்து விட்டார்கள் என்று சொன்னார். அவர்களுக்கு நிதி உதவியாக 2 லட்சம் கொடுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் அறிவித்து விட்டார்கள். ஆனால் இதுவரையில் வந்து சேரவில்லை என்று சொன்னார். நான் உடனே அவரிடம், கவலைப்படாதீர்கள் உடனடியாக உங்கள் பிரச்சினை தீர்க்கப்படும் என்று சொன்னேன்.

அந்தப் பெண்ணின் தந்தையார் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதனால் நான் டெல்லியில் இருக்கும் டி.ஆர்.பாலு அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர் அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கினார். இது தொடர்பான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

29-ஆம் தேதி மாலையில் 6 மணிக்கு இந்த விவகாரம் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை நாம் பார்ப்பதை விட, ஆளும் கட்சிக்காரர்கள் தான் அதிகமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். இரவோடு இரவாக 10 மணிக்கு இந்த அரசு, அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் 2 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டார்கள். அதற்கு அந்தப் பெண் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு நன்றி சொன்னார்

இதற்கிடையே, அ.தி.மு.க.வின் ஐ.டி. விங், ‘ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார். நாங்கள் 2 மாதத்திற்கு முன்பாகவே கொடுத்துவிட்டோம்’ என்று ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்கள்.

நான் இதை நிரூபிக்க தயாராக இருக்கிறேன். அவர்கள் 29.01.2021 அன்று அந்தப் பெண்ணின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தியதற்கு ஆதாரம் உள்ளது. உண்மையில் அ.தி.மு.க. ஐ.டி.விங்கிற்கு தெம்பு இருந்தால் – திராணி இருந்தால் என் மீது வழக்கு போடுங்கள். இதில் அரசியல் தேவையா?

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் எடுத்த நடவடிக்கைகளை விமர்சிக்ககிறார்கள். நான் சொல்வது பொய்யாக இருந்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் நீங்கள் சொன்னது பொய்யாக இருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடுப்பேன்”என்று எச்சரித்த ஸ்டாலின் தனக்கும் எம்ஜிஆருக்குமான ஃபளாஷ்பேக்கை பற்றி கூறினார்.

“நேற்று நான் ‘இந்தியா டுடே’-வுக்கு ஒரு பேட்டி கொடுத்தேன். அப்போது என்னை பேட்டி எடுக்க வந்த ஒரு பெண் நிருபர் என்னிடத்தில், எம்.ஜி.ஆரும் நானும் இருக்கும் புகைப்படத்தைக் காண்பித்து, இதன் பின்னணி என்ன? ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார்.

அப்போது நான், நன்றாக நினைவிருக்கிறது. 1971ஆம் ஆண்டு அண்ணா மறைவிற்குப் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்று – இதுவரை தமிழ்நாட்டில் யாரும் பெற முடியாத வரலாற்று வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்த ஒரே கட்சி தி.மு.க. தான். கலைஞர் தலைமையில் ஆட்சி அமைந்தது. அந்தத் தேர்தலுக்கு நான் பிரச்சார நாடகம் நடத்தினேன். ‘முரசே முழங்கு’ என்ற பிரச்சார நாடகத்தில் எனக்கு கலைஞர் வேடம். அதுதான் அந்தப் புகைப்படம்.

அந்த தேர்தலுக்குப்பிறகு வெற்றி விழா நடத்த முடிவு செய்து, அதற்காக தலைவரிடமும், எம்.ஜி.ஆரிடமும் தேதி வாங்கினேன். நடித்த நடிகர்களை பாராட்டி மோதிரம் போட வேண்டும் தலைவர் அவர்கள். எம்.ஜி.ஆர். அவர்கள் எங்களைப் பாராட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டும். அந்த விழாவிற்கு “வெற்றி விழா” என்று நான் தலைப்பிட்டேன். அதற்கு கலைஞர் அவர்கள் ‘நிறைவு விழா’ என்று போடச் சொன்னார். ஏனென்றால் “நான் தான் ஒழுங்காக படிக்காமல் விட்டு விட்டேன். நீயாவது கொஞ்சம் படிக்க வேண்டும்” என்று எனக்கு அறிவுரை சொல்லி அவ்வாறு செய்தார்.

நாடகம் நடக்கிறது. அப்போது தலைவர்கள் எல்லாம் பேசினார்கள். அப்போது எம்.ஜி.ஆர். அவர்கள் பேசிய போது, “நான் உன் பெரியப்பாவாக சொல்கிறேன் கேள். ஒழுங்காக படித்து, இப்போது எந்த அளவிற்கு அரசியலில் ஆர்வமாக இருக்கிறாயோ அதே அளவிற்கு இனிமேலும் இருக்க வேண்டும்” என்று அறிவுரை சொன்னார்.

இப்போது எம்.ஜி.ஆரைப் பற்றி பழனிசாமி பேசிக் கொண்டிருக்கிறார். இவர் எம்.ஜி.ஆர். முகத்தையாவது பார்த்திருப்பாரா?”என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

**-வேந்தன்**�,

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *