ஒரே நிறுவனத்துக்கு 100 டன் ஸ்வீட்: டெண்டர் விதிமுறைகளைத் திருத்திய அமைச்சர்!

Published On:

| By Balaji

அரசு போக்குவரத்துத் துறை தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு ஸ்வீட் வழங்குவதற்கு 100 டன் ஆர்டரை ஒரே நிறுவனத்துக்கு வழங்குவதற்காக டெண்டர் விதிமுறைகளைத் திருத்தியது அம்பலமாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 18ஆம் தேதி, [ஸ்வீட் வாங்குவதில் கமிஷன்: அமைச்சர் மகனின் அதிரடி தீபாவளி!](https://minnambalam.com/politics/2021/10/18/27/sweet-purchase-commission-minister-rajakannappan-son-aligations-transport-aavin) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

அதில், “அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு காலம் காலமாக ஒவ்வொரு தீபாவளிக்கும் ஒரு கிலோ ஸ்வீட் மற்றும் காரம் கொடுப்பார்கள். அதுவும் மிக சுமாராகவே இருக்கும். கடந்த ஆண்டு அதிமுக ஆட்சியில் தீபாவளிக்குத் தொழிலாளர்களுக்கு ஸ்வீட் வழங்க நெய் கலந்த ஸ்வீட் ஒரு கிலோ ரூ.500 என்று சுமார் நூறு டன் வாங்கினார் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

புதிய ஆட்சி அமைத்துள்ள திமுக அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருப்பவர் ராஜ கண்ணப்பன். இந்த ஆண்டு தீபாவளி 2021 நவம்பர் மாதம் 4ஆம் தேதி வருவதை முன்னிட்டு போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஸ்வீட் கொடுக்க யாரிடம் ஆர்டர் கொடுப்பது என ஆலோசித்தனர். இந்த ஆர்டரைப் பெறுவதற்காக பல நிறுவனத்தினரும் போட்டி போட்டுக்கொண்டு அமைச்சரைச் சந்தித்து வந்தார்கள். இந்த நிலையில் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனின் மகன் திலீப் திடீரென்று மூக்கை நுழைத்துள்ளார். அவரே இதுகுறித்து துறை அதிகாரிகளிடம் சில ஆலோசனைகளைப் செய்துள்ளார்.

“கடந்த தீபாவளிக்கு நெய் ஸ்வீட் கிலோ ரூ.500 என்று பர்ச்சேஸ் செய்யப்பட்டுள்ளது, இந்த ஆண்டு அதைவிடக் குறைவான விலையில் ஆவினில் வாங்கலாம்’ என்று சிலர் ஆலோசனைகள் கூறியுள்ளனர். ஆனால் அமைச்சரின் மகன் இதை ஏற்கவில்லை. ஆவினைத் தவிர்த்து ஒரு பெரிய நிறுவனத்தின் பிரதிநிதியை அழைத்து ஒரு கிலோ ரூ.600-க்கு சப்ளை செய்யுங்கள், நெய் கலந்த ஸ்வீட் வழங்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஆயில் ஸ்வீட்டாக இருந்தாலே போதும் என்று உத்தரவிட்டுள்ளார். அதேநேரம் 30 சதவிகிதம் கமிஷனும் பேசப்பட்டிருக்கிறது. அதற்கு அந்த ஹோட்டல் நிறுவனமும் சம்மதித்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

அது தொடர்பான கூடுதல் தகவல்களும் தற்போது கிடைத்துள்ளன.

“ஸ்வீட் ஆர்டரை ஒரே நிறுவனத்துக்குக் கொடுப்பதற்காக, ஏல விதிமுறைகளையும் படிவத்தையும் முன்கூட்டியே தெரியப்படுத்தாமல் வழங்காமல் ரகசியமாக வைத்துள்ளனர், அதில் டெண்டர் படிவம் விற்பனை தேதி, 26-10-2021 மாலை 4.00 கடைசி தேதி 27-10-2021 2.00 மணி, ஏலம் 27-10-2021 மாலை 3.00 மணி என்றும், ஏலத்தில் கலந்துகொள்பவர்களுக்கு பல விதிமுறைகளையும் குறிப்பிட்டுள்ளனர். அதில் குறிப்பாக ஸ்வீட் ஆர்டர் எடுக்க ஏலத்தில் கலந்துகொள்ள தகுதியானவர்கள் ஆண்டுக்கு நூறு கோடி டர்ன் ஓவர் செய்திருக்க வேண்டும் அதற்கான ரெக்கார்டுகள் இருக்க வேண்டும் என்றும் விதிகளை உருவாகியுள்ளனர்.

டெண்டர் படிவங்களை முன்கூட்டியே தெரியப்படுத்தினால்தான் டெண்டர் படிவத்தை பூர்த்தி செய்வதற்கு டாக்குமென்ட்களை தயார்படுத்த முடியும், பரவலாக பலரும் டெண்டரில் கலந்து கொள்வார்கள். தரமும் கூடும், விலையும் குறையும், ஆனால், ஒரே நிறுவனத்திடம் 30 சதவிகிதம் கமிஷன் பெற்றுக்கொண்டு ஆர்டர் கொடுப்பதற்கு முடிவு செய்துவிட்டதால், டெண்டரில் யாரும் கலந்துகொள்ளாத அளவுக்கு விதிமுறைகளைத் திருத்தியுள்ளனர்.

100 டன் ஸ்வீட்டுகளை வாங்குவதற்கு கும்பகோணம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை விரைவு போக்குவரத்து கழகம், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கோவை, மதுரை, சேலம் ஆகிய ஒன்பது  போக்குவரத்துக் கழகங்களுக்கும் தனித் தனி டெண்டர் விடப்பட்டுள்ளது ஒரே தேதியில்தான் இவற்றுக்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. இவற்றில் மதுரை, கோவைக்கு இதுவரை டெண்டர் ஃபார்ம் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு கொடுப்பதற்காகவே 100 கோடி டர்ன் ஓவர் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார்கள் தமிழக ஹோட்டல் சங்கத்தின் நிர்வாகிகள்.

**-வணங்காமுடி**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share