ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழகத்தின் பத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் நடந்த நவம்பர் 5 ஆம் தேதி உத்தராகண்டில் பிரதமர் மோடி கலந்துகொண்ட ஆதி சங்கரர் நிகழ்ச்சியை எல்.இ.டி. ஸ்க்ரீன் வைத்து பாஜகவினர் ஒளிபரப்பி, அதை கூட்டமாகப் பார்த்தார்கள் என்றும்…ஸ்ரீரங்கம் கோயிலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பார்த்தார் என்றும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ராம பானம் என்ற அமைப்பின் தலைவர் ரங்கராஜ நரசிம்மன் குற்றம் சாட்டியதோடு, அண்ணாமலை மீது போலீசில் புகாரும் கொடுத்திருக்கிறார். அதற்காக போலீஸ் சிஎஸ்ஆர் எனப்படும் ரசீதும் கொடுத்துள்ளது.
இந்த நிலையில் மின்னம்பலத்தில் இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று (நவம்பர் 14) கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஸ்ரீரங்கம், மதுரைக் கோயில்களில் எல்.இ.டி. திரையமைத்து பிரதமரின் உரையை பா.ஜ.க.வினர் பார்ப்பது – கேட்பது சட்டப்படி சரி தானா? கேதார்நாத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் துவக்க விழா மற்றும் ஆதிசங்கரர் மடத்தின் ஆதி சங்கரர் மடத்தின் பூஜை விழாவில் பங் கேற்ற பிரதமரின் உரையை ஸ்ரீரங்கம், மதுரைக் கோயில்களில் எல்.இ.டி. திரையமைத்து பா.ஜ.க.வினர் கேட்டுள்ளனர். இந்த சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள்மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்துக் கோயில்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங்பரி வார்களின் கட்சி அலுவலகங்களாக மாறி விட்டன என்பது அப்பட்டமாகவே தெரிகிறது.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பிரதமரின் உரையைக் கேட்க எல்.இ.டி. திரை / டி.வி, ஸ்பீக்கர் வைத்து பா.ஜ.க.வினர் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள். கோயில்களைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் நெடுநாளைய குறிக்கோள். அதனை மறைமுகமாக பல இடங்களில் நிறைவேற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் கோயில் மண்டபம் அல்லது வளாகத் திற்குள் (பிரதமரின் உரை என்று சாக்கிட்டு) இப்படி திரையிட்டு குறிப்பிட்ட கட்சியினர் பார்க்க அனுமதி உண்டா? அளித்தது யார்? என்பது குறித்து கவனிப்பது முக்கியம். இதே போல் தொடர்ந்தால் கோயில்கள் ஆர்.எஸ்.எஸ். பரப்புரைத் தளங்களாக மாறிவிடும் ஆபத்து உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை அரசியல் படுத்துவது எந்த வகையில் சரி? எதற்கெடுத்தாலும் ‘ஆகமம்’ ‘ஆகமம்’ என்று கூச்சல் போடுபவர்கள், இப்படி கோயில்களைத் தங்கள் கூடார மாக மாற்றுவது எந்த வகையில் சரி? இது அரசாங்கத்தின் குறிப்பாக இந்து அற நிலையத்துறை அமைச்சரின் கவனத்துக்கு வந்ததா? இதற்குக் காரணமாக இருந்த இந்து அறநிலையத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பிரதமர் உரையைத் தானே ஒளிபரப்பினார்கள் என்று சொல்லித் தப்பிக்கவும் முடியாது. ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சியோ ஆதி சங்கரர் மடத்தில் பிரதமர் மேற் கொண்ட பூஜை விழாவாகும் – அப்பட்டமாக ஓர் இந்து மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி. இந்த வாய்ப்பு மற்றவர்களுக்கு அளிக்கப்படுமா? இதுவரை இல்லாத ஒன்றிற்குப் புதுவழி திறந்து விடப்பட்டிருக்கிறது என்று கருதலாமா? கோயில்களைப் போராட்டக் களமாக மாறும் நிலையை இதன் மூலம் ஏற்படுத்தாதா? முளையிலேயே இதனைக் கிள்ளி எறிய வேண்டும். இந்து அறநிலையத்துறை அமைச்சர் கவனித்துக் கொள்வார் என்றே எதிர்பார்க்கிறோம்”என்று கூறியுள்ளார் கி.வீரமணி.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 14) செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாஜக தலைவர் அண்ணாமலையிடம், ‘கோயில்களில் பாஜக அரசியல் கூட்டம் நடத்தியதாகவும் அதை எதிர்த்துக் கேட்டதற்காக தன்னை மிரட்டுவதாக ஸ்ரீரங்கம் பிராமணர் வீடியோ வெளியிட்டிருக்கிறாரே?”என்று கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “ பிரதமர் கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் 16 கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்தது. உதாரணத்துக்கு ஸ்ரீரங்கம் கோயிலிலும் இந்து சமய அறநிலையத்துறைதான் ஏற்பாடு செய்திருந்தது. நான் அங்கே ஒரு சாதாரண மனிதனாக கலந்துகொண்டேன். இதில் எந்தத் தவறும் கிடையாது. இதில் என் மீது புகார் சொல்லும் தனி நபர்களை மதித்து பதில் சொல்ல வேண்டியது கிடையாது. இதேபோன்ற அரசு நிகழ்ச்சிகளை மேலும் நடத்துவோம். இது தொடர்பாக
நான் யாரையும் மிரட்டவில்லை” என்று கூறினார் அண்ணாமலை.
**-ஆரா**
[ஸ்ரீரங்கம் கோயிலில் அரசியல் கூட்டம்:அண்ணாமலை மீது வழக்குப் பதிவு?](https://minnambalam.com/politics/2021/11/13/32/bjp-annamalai-srirangam-temple-political-meeting-rangaraja-narasimman-police-complaint-csr-fir)
[கோயில்களை அரசியல் கூடாரமாக்கிய பாஜக;எதிர்த்தவருக்கு கொலை மிரட்டல்](https://minnambalam.com/politics/2021/11/12/31/tamilnadu-bjp-anti-hindu-srirangam-temple-annamalai-rangaraja-narasimman)
�,