சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவுகள், வீடியோக்கள் மூலம் சமூக வலைத்தள உலகில் அறிமுகமான மாரிதாஸ் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிளைச் சிறையில் டிசம்பர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த நிலையில் அவர் மீது கடந்த ஆண்டு நியூஸ் 18 சேனலின் ஆசிரியர் வினய் சவராகி கொடுத்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், நேற்று (டிசம்பர் 11) மாரிதாஸை போலீசார் மீண்டும் கைது செய்தனர். இதற்கான தகவல் சிறையில் இருக்கும் மாரிதாசுக்கு நேற்று தெரிவிக்கப்பட்டது.
இதுபோல மாரிதாஸ் மீது இருக்கும் வழக்குகளை ஒருங்கிணைத்து அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் தயாராகிக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகள் காரணமாகக் கைது செய்யப்பட்ட கிஷோர் கே ஸ்வாமி, கல்யாணராமன் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களைப் போல மாரிதாஸையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து விடக்கூடாது என்பதில் அண்ணாமலை தீவிரமாக இருக்கிறார். இதற்காக இன்று (டிசம்பர் 12) பாஜகவின் சமூக ஊடகப் பிரிவு சார்பில் கமலாலயத்தில் வாயில் கறுப்புத் துணி கட்டிக் கொண்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேநேரம் இன்று காலை ஆளுநரை பாஜக தலைவர் அண்ணாமலை சந்திக்கிறார்.
கிஷோர் கே ஸ்வாமி பாஜககாரர் இல்லை என்ற போதிலும் அவருடைய பதிவுகள் பாஜக ஆதரவு தொனியில் இருந்தன. பாஜகவின் எதிர்ப்பாளர்களை அவர் கடுமையாக எதிர்த்தார். கல்யாணராமன் வெளிப்படையாக பாஜகவைச் சேர்ந்தவர். இவர்களையெல்லாம் கைது செய்த போது பாஜக உரிய எதிர்வினையாற்ற வில்லை. இப்போது கைது செய்யப்பட்டிருக்கும் மாரிதாஸும் முதலில் ரஜினிகாந்த் ஆதரவு நிலைப் பாட்டிலிருந்து பிறகு பாஜகவின் நிலைப்பாட்டையே தொடர்ந்து தனது பதிவுகளில் பிரதிபலித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் மாரிதாஸை குண்டர் சட்டத்தில் கைது செய்வதைத் தடுக்க விரும்புகிறார் அண்ணாமலை. இதற்காகவே அவர் கருத்துரிமை என்ற வகையில் மாரிதாசுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு…மாரிதாசை விட 100 மடங்கு கடுமையான பதிவுகளைச் செய்தவர்கள் பற்றிய ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறுகிறார். மாரிதாசை குண்டர் சட்டத்தில் அடைத்து விடக்கூடாது என்பதற்காகவே அவசரமாக இன்று ஆளுநரை சந்திக்கிறார் அண்ணாமலை” என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.
**வேந்தன்**
�,”