யு ட்யூபர் மாரிதாஸின் ட்விட்டர் பதிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர் நீதிமன்றம் இன்று (டிசம்பர் 14) ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 8 ஆம் தேதி குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் நம் நாட்டின் முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாரிதாஸ் ஒரு ட்விட் பதிவு செய்து கொஞ்ச நேரத்தில் அதை நீக்கினார். இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த திமுகவின் ஐடி விங் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் மாரிதாஸ் கைது செய்யப்பட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் மாரிதாஸ் மீது நியூஸ் 18 சேனல் விவகாரம் தொடர்பான வழக்கிலும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக போராட்டத்தில் இறங்கியது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து இதுகுறித்து புகார் தெரிவித்தார்.
இதற்கிடையே தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு மாரிதாஸ் தரப்பில் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
அவ்வழக்கில் மாரிதாஸ், “ என் மீது வழக்குப்பதிவு செய்ததிலும், கைது செய்ததிலும் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை. அதனால் என் மீதான வழக்கை ரத்து செய்யவேண்டும்”என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், “ மனுதாரரின் டிவிட்டா் கணக்கை 2 லட்சம் போ் பின்தொடா்கிறார்கள். அவரது டிவிட்டர் பதிவில் , முப்படையின் தலைமை தளபதி மரணம் குறித்த கருத்தில் தமிழகம் இன்னொரு காஷ்மீராக மாறுகிறதா என குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் நேர்மைக்கு எதிரான சூழ்ச்சியோடு இந்த கருத்து பதிவிடப்பட்டுள்ளது. பிரிவினை வாதத்தைத் தூண்டும்படியும் இருக்கிறது” என்று வாதாடப்பட்டது.
மாரிதாஸ் தரப்பில், “எந்த உள்நோக்கத்துடன் கருத்துகளை பதிவிடவில்லை. அவா் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்”என்று கோரிக்கை விடுத்தார்கள்..
இந்நிலையில் வழக்கு இன்று ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். நீதிபதியின் உத்தரவு பற்றிய விரிவான தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
**-வேந்தன்**
�,