மன்மோகன் சிங் எப்படி இருக்கிறார்?

Published On:

| By Balaji

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நலம் குறித்து ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்தனர்.

2004 மே முதல் 2014 மே வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். தற்போது அவருக்கு 89 வயது. 2009ஆம் ஆண்டில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்னர் நலம் பெற்றார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் அவருக்குக் காய்ச்சல் இருந்ததாகவும், நேற்று மூச்சுத்திணறலும் நெஞ்செரிச்சலும் ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தற்போது டாக்டர் நிதிஷ் நாயக் தலைமையிலான இருதயநோய் நிபுணர்கள் குழுவின் கண்காணிப்பிலிருந்து வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டாக்டர் மன்மோகன் சிங் விரைவில் குணமடையவும், அவர் ஆரோக்கியமாக இருக்கவும் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதுபோன்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மருத்துவமனை சென்று மன்மோகன் சிங்கைச் சந்தித்து நலம் விசாரித்தார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் மன்மோகன் சிங்கை சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் என பலரும் மன்மோகன் சிங் விரைவில் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share