மேற்குவங்க மாநில அரசியல் களேபரத்தில் பாஜகவுடன் சரிக்குச்சமமாக மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கும் மம்தாவுக்கு, சோதனையான நேரத்தில் கைகொடுத்திருக்கிறார், வாஜ்பாய் அமைச்சரவை சகாவான யஷ்வந்த் சின்கா. ஒருங்கிணைந்த பீகாரின் புள்ளியான 83 வயதான சின்கா, கொல்கத்தாவில் நேற்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துகொண்டார்.
நேற்று சனிக்கிழமை காலை மம்தாவை கொல்கத்தா காளிகட்டில் உள்ள அவரின் வீட்டில் சந்தித்த யஷ்வந்த் சின்கா, முக்கால் மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். அதன்பிறகு திரிணமூல் கட்சியில் அவரின் இணைப்பு நிகழ்வு நடைபெற்றது.
மம்தாவை அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்த அவர், வாஜ்பாயி அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் மம்தா ரயில்வே அமைச்சராகவும் இருந்தபோது, நடந்த ஒரு சம்பவத்தை விவரித்தார். ஆகாஓகோதான் போடவில்லை.
1999 நேபாளத்தின் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு வந்துகொண்டிருந்த இந்தியன் ஏர்லைன்ஸ் 814 விமானத்தை, ஆப்கனிஸ்தானின் தாலிபான் தீவிரவாதிகள் காந்தகாருக்குக் கடத்திச்சென்றனர். அது குறித்து மத்திய அமைச்சரவை கூடி ஆலோசனை செய்தது.
அப்போது, “ பிணையக் கைதிகளாகப் பிடித்துவைக்கப்பட்ட பயணிகளை விடுவிக்க நான் போகிறேன்; அவர்களுக்குப் பதிலாக நான் பிணையக் கைதியாக இருக்கிறேன் என்று மம்தாஜி சொன்னார். தேசத்துக்கு என்ன தியாகம் தேவையோ அதைச் செய்யத் தயாரென அவர் சொன்னார். நாட்டுக்காக மகிழ்ச்சியுடன் எதையும் செய்ய தயாராக இருப்பார். இந்த மாதிரியான தியாகம் தான் இப்போதைக்கு நாட்டுக்குத் தேவை. இது வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டுமல்ல, தேசத்தின் பெருமையையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கானது..” என்றெல்லாம் பாராட்டித் தள்ளினார், சின்கா.
மோடியும் அமித்ஷாவும் கட்சியில் தலைதூக்கிய பிறகு, ஒதுங்கியிருந்த யஷ்வந்த் சின்கா, 2018-ல் பாஜகவிலிருந்து வெளியேறினார். அவருடைய முன்னாள் கட்சியின் தலைவர்களைப் பற்றி வெளுத்து வாங்கினார்.
” அவர்கள் இருவரும் நாட்டை விசித்திரமான ஒரு நிலைக்கு கொண்டுபோய்விட்டனர். நம்முடைய ஜனநாயகத்தில் ஒவ்வொருவருக்கும் சம முக்கியத்துவம் அளிக்கக்கூடியதாக மரபான கருத்தாக்கம் இருந்துவருகிறது. அந்த விழுமியத்துக்கு மதிப்பீடுகளுக்கு இப்போது அபாயம் ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகம் என்பது அதன் நிறுவனங்களின் வலிமையிலேயே தங்கியிருக்கிறது என்பதுதானே நம்முடைய மனநிலையும் சிந்தனையுமாக இருக்கிறது. தற்போது ஜனநாயகத்தின் ஒவ்வொரு நிறுவனமும் பலவீனப்படுத்தப்பட்டு இருக்கிறது. நீதித்துறைக்கும்கூட இப்படியான நிலைமை ஏற்பட்டிருப்பது, வேதனையானது. தேசத்துக்கு இது பேரபாயமாக இருக்கும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலை நடத்துவது மட்டுமல்ல ஜனநாயகம். எத்தனை இடங்களில் வென்றாலும் எந்தெந்த இடங்களில் வென்றாலும் ஆளும் கட்சி என்பது ஒரு தரப்பு மட்டுமே.. வாஜ்பாய் காலத்து கட்சியையும் இப்போதைய கட்சியையும் ஒப்பிட்டால் வானுக்கும் மண்ணுக்கும் உள்ள இடைவெளி இருக்கிறது. வாஜ்பாய் எதிலும் பொதுக்கருத்தை விரும்புவார். இவர்களோ அதை நசுக்குகிறார்கள். அவர், மனிதர்களிடம் கூட்டுறவை விரும்புவார். இவர்களோ நபர்களை வலிந்து தம்பக்கம் இழுக்க விரும்புகிறார்கள். இந்தத் தேர்தல் வங்கத்தின் எதிர்காலத்துக்கு முக்கியமானது என்பதில் சந்தேகம் இல்லை. அது மட்டுமல்ல, தேசத்தின் வருங்காலத்துக்கானதும்தான். டெல்லியில் 2024 (மக்களவைத் தேர்தல்) நடைபெறவேண்டிய மாற்றத்துக்கு வங்கம் பாதை அமைக்கவேண்டும்.” என்று ஆக்ரோசமாகப் பேசினார், சின்கா.
மம்தாவின் மீதான ’தாக்குதலைப்’ பற்றியும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைப் பற்றியும் சின்கா விளாசத் தவறவில்லை.
பழைய பீகார்க்காரரான சின்காவால் மம்தாவுக்கு பெரிய அளவுக்கு வாக்குகளைத் திரட்டித் தந்துவிட முடியாதுதான். ஆனாலும் மம்தா மீதான பாஜக தரப்பின் தாக்குதலின்போது, இவரின் பங்களிப்பு உதவியாக இருக்கும் என்பது திரிணமூல் காங்கிரஸ் தலைவரின் கணக்கு.
நிச்சயம், இதற்கான வாய்ப்பு உண்டு!
**- இளமுருகு**
�,