விவசாயிகள் இறப்புத் தகவல் இல்லை- கொரோனா இறப்புத் தகவல் ஏது?

Published On:

| By Balaji

700 விவசாயிகள் உயிரிழந்த தகவல் உங்களிடம் இல்லை என்றால் கொரோனாவால் உயிரிழந்த லட்சக்கணக்கானோரின் தரவுகளை எப்படி சேகரித்தீர்கள் என்று மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி சலோ என்ற பேரில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்துக் கடந்த ஓராண்டாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது 700 விவசாயிகள் உயிரிழந்ததாக விவசாயிகள் அமைப்பு கூறுகிறது.

இவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இன்று மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் விவசாயிகள் இறந்த விவகாரத்தை எழுப்ப முயன்றனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கவே நீதி வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். அதோடு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். இதனால் மக்களவை காலை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர், விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக மக்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், “விவசாயிகள் உயிரிழந்ததாக எந்த பதிவும் இல்லை. அதனால் இழப்பீடு என்ற கேள்விக்கே இடமில்லை” என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக கேள்வி எழுப்பியுள்ள மல்லிகார்ஜுன கார்கே, “மத்திய அரசு விவசாயிகளை அவமதிக்கிறது. போராட்டத்தின் போது 700 விவசாயிகள் உயிரிழந்த நிலையில், யாரும் உயிரிழக்கவில்லை, எந்த பதிவும் இல்லை என்று எப்படிக் கூற முடியும்.

700 பேரின் தரவுகள் அரசிடம் இல்லை என்றால், கொரோனாவால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். அவர்களின் தரவுகளை எப்படிச் சேகரித்தீர்கள். கடந்த 2 ஆண்டுகளில் கொரோனா தொற்றால் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனால் 4 லட்சம் பேர்தான் உயிரிழந்ததாக மத்திய அரசு கணக்கு காட்டுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

**-பிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share