மலேசிய நாட்டின் பிரதமர் மகாதீர் முகமது தனது பதவியை இன்று (பிப்ரவரி 24) ராஜினாமா செய்துள்ளார். மலேசிய நேரப்படி இன்று மதியம் மன்னரிடம் வழங்கப்பட்ட ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டிருக்கிறது.
டாக்டர் மகாதீரின் பெர்சாட்டு கட்சியும் மேலும் மூன்று கட்சிகளும் கூட்டணி சேர்ந்து அரசை நடத்திவந்தன. இந்தக் கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது. அந்நாட்டின் பொருளாதாரத்துறை அமைச்சர் அஸ்மின் அலி தலைமையில் மகாதீருக்கு எதிராக ஓர் அணி உருவானது. .
60 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவை தடையின்றி ஆட்சி செய்த முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் கடுமையாக எழுந்தன. இதையடுத்து 2018 மே தேர்தலில் மகாதீர் பிரதமரானார். அண்மைக் காலமாகவே மகாதீர் எந்தவொரு வார இறுதி கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை இதுவே அவரது ராஜினாமாவுக்கான முன்னோட்டமாக இருந்தது என்கிறார்கள்.
சொந்தக் கட்சிக்குள் ஆறு எம்.பிக்கள் மகாதீரை எதிர்த்து கட்சியை விட்டு வெளியேறினார்கள். அவரது முன்னாள் போட்டியாளரான அஸ்மின் அலி உட்பட இரண்டு முன்னாள் அமைச்சர்கள் நீக்கப்பட்டதையடுத்து நிலைமை முற்றியதால் ராஜினாமா செய்திருக்கிறார் மகாதீர். மீண்டும் அவரே வேறு கட்சிகளுடன் சேர்ந்து பிரதமர் ஆவாரா, அல்லது கூட்டணி மாறி வேறு ஒருவர் பிரதமர் ஆவாரா என்பது பற்றிய எதிர்பார்ப்பு அந்நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் இந்தியாவின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து வெளிப்படையாகப் பேசினார் மகாதீர். “மதச்சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் இந்தியா, சிறுபான்மையினரான முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் வகையில் சட்டமியற்றியிருக்கிறது. இதுவே மலேசியாவில் இயற்றப்பட்டால் நிலைமை என்னாகும்?” என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலடி தரும் விதமாக மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்வதை இந்தியா நிறுத்தியது என்பது குறிப்பிடத் தக்கது.�,