மேகதாது அணைக்கு எதிராகத் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று(மார்ச் 24) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடகா தீவிரமாக முயன்று வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மார்ச் 22ஆம் தேதி மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானம் பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
அதுபோன்று கர்நாடகாவிலும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், முன்னாள் முதல்வர்களான சித்தராமையா, எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டன தீர்மானம் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் தமிழக தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அப்போது, “மேகதாது திட்டத்தால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. இருந்தபோதிலும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. அதுபோன்று மத்திய நீர்வள ஆணையம், மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறையும் மேகதாது திட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கர்நாடக வலியுறுத்துகிறது” என்று தீர்மானத்தை முன்மொழிந்து அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை பேசினார்.
இந்த தீர்மானம் எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் ஜனதாதளம் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
**-பிரியா**