அ. குமரேசன்
வீடற்றவர்களாக வெளியே சுற்றித் திரிகிற நிலைமை கொடுந்துயரம். அப்படித் திரிவோரில் மனநோயர்களின் நிலைமை பெரும் அவலம். ஏற்கெனவே வீட்டிலிருந்து விரட்டப்பட்டவர்கள் வெளியேயும் விரட்டப்படுவார்கள். அடி உதை கல்வீச்சுகளை எதிர்கொள்வார்கள். எதற்காக அடிக்கிறார்கள் என்பது கூடத் தெரியாதவர்களாக அவர்கள் வலியோடு நகர்வார்கள். அதிலும் பெண்களாக இருந்துவிட்டால் பாலியல் வன்மங்களுக்கும் உள்ளாவார்கள்.
இத்தகையோரின் பாதுகாப்புக்காகவும் பராமரிப்புக்காகவும் தமிழகத்தில் திமுக அரசு ஒரு கொள்கையை உருவாக்கவுள்ளது. அதற்கான வரைவறிக்கை ஒன்று இணையத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதை வரவேற்கிறவர்களே விமர்சிக்கவும் செய்திருக்கிறார்கள். அதற்குள் போவதற்கு முன்…
வீடு என்பது நான்கு சுவர்களுக்கு மேல் கூரை போடப்பட்ட வெறும் கட்டடம் அல்ல. மனிதர்கள் வாழும் இடம். அன்பும் ஆதரவும் அரவணைப்பும் கிடைக்கிற இடம். மனநோய்களுக்கு இவைதாம் முக்கியமாகத் தேவை. அவர்கள் வீடற்றவர்களாகத் திரிகிறார்கள் என்றால் இவையெல்லாம் மறுக்கப்பட்டவர்களாக வெளியேற்றப்பட்டு விட்டார்கள் என்பதுதான் பொருள். வீட்டில் வைத்துப் பராமரிக்க இயலாத அளவுக்கு வறுமை, அவர்களை சுமையாகக் கருதுவது, சமூக இளக்காரம் உள்ளிட்ட காரணங்களால் அவர்கள் குடும்பங்களிலிருந்து துண்டிக்கப்பட்டு கைவிடப்படுகிறார்கள். சமுதாயத்தில் முழுமையாகப் பங்கேற்க இயலாதவர்களாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
2015-16இல் வெளியிடப்பட்ட தேசிய மனநல ஆய்வறிக்கை, சுமார் 15 கோடி இந்தியர்கள் மனநலக் குறைபாடுகளோடு வாழ்கிறார்கள் என்று தெரிவிக்கிறது. அவர்களில் 83 சதவிகிதம் பேருக்கு தேவையான பராமரிப்புகள் கிடைப்பதில்லை.
2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நம் நாட்டில் கிட்டத்தட்ட 17 லட்சம் பேர் வீடற்றவர்களாகத் தெருக்களில் திரிகிறார்கள். அவர்களில் 41 சதவிகிதம் பேர் (7,26,169) பெண்கள். இந்த 17 லட்சம் பேரில் ஏறத்தாழ 50 சதவிகிதத்தினர் மனநோயாளிகளாக இருக்கக்கூடும் என்று மனித நடத்தை மற்றும் இணை அறிவியல் ஆய்வு நிறுவனம் (ஐஎச்பீஏஎஸ்) வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
**ஒன்றுக்கொன்று தொடர்பு!**
“வீடின்மை, மனநலமின்மை இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. மனநோய் வீடற்ற நிலைமைக்குக் காரணமாகவும் இருக்கிறது, அதன் விளைவாகவும் இருக்கிறது” என்று இந்த அறிக்கை வெளியானதையொட்டிக் கூறினார் வேலூர், கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியின் மனநலத் துறை பேராசிரியர் கே.எம்.ஜேக்கப். “நல்ல குடிநீர், உணவு, உடை, சுகாதாரம், உறைவிடம், உடல் சார்ந்த பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகிய அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படுவதன் மூலம் வீடற்ற நிலைமை மனநோயைத் தீவிரப்படுத்துகிறது” என்றார் அவர்.
இவற்றோடு, முன்னரே குறிப்பிட்டது போல, பெண்களாக இருந்துவிட்டால் இன்னும் மோசமான நிலைமை. அடையாளம் தெரியாத நபர்களால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட மனநலம் குன்றிய பெண் கர்ப்பம் என்ற செய்தி அவ்வப்போது வருவதைப் பார்க்கிறோமே.
இத்தகைய நிலைமையில் வீடற்றுத் திரியும் மனநோயர்களின் பாதுகாப்புக்காக ஒரு கொள்கை வரைவறிக்கை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டுக்கே ஒரு முன்னோடி ஆவணமாகத் திகழக்கூடிய “மனநலப் பிரச்சினைகளுடன் கூடிய வீடற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தமிழ்நாடு அரசின் கொள்கை – வழிகாட்டல்களும் நடைமுறைகளும்” என்ற இந்த வரைவறிக்கையை, தேசிய மனநலத் திட்டம் – தமிழ்நாடு (என்எச்எம் – தமிழ்நாடு) பிரிவு தயாரித்துள்ளது. தமிழக அரசின் கீழ் இந்தப் பிரிவு செயல்படுகிறது. 144 பக்கங்கள் கொண்ட வரைவறிக்கையை மனநல மருத்துவர்களும் ஆய்வாளர்களும் பேராசிரியர்களுமாக 19 வல்லுநர்கள் கொண்ட குழு தயாரித்துள்ளது.
**உரிமையும் பாதுகாப்பும்!**
வீடற்றுத் திரியும் மனநோயர்களின் தேவைகளை மட்டுமல்லாமல், உரிமைகளையும் பாதுகாப்பது கொள்கையின் நோக்கங்களில் ஒன்றாகக் கூறப்பட்டிருப்பது கைதட்டி வரவேற்க வேண்டிய அறிவிப்பாகும். உலகம் முழுவதும் மனித உரிமை இயக்கங்கள் இதை வலியுறுத்தி வருகின்றன. மாவட்டம்தோறும் இவர்களுக்கான பராமரிப்பு மையங்களை ஏற்படுத்துதல், 30 முதல் 50 வரையிலான படுக்கை வசதியுடன், மனநல மருத்துவமனையோடு இணைந்த மையங்களாக அவற்றை அமைத்தல், நிலைத்த வளர்ச்சியோடு இணைந்த அணுகுமுறைகள், பாதுகாப்பான வெளிகளை ஏற்படுத்துதல், வாழ்வாதாரத் திட்டத்தோடு இணைந்த மையங்கள், அரசமைப்புச் சட்ட உரிமையாக அடிப்படை உரிமைகள் கிடைக்கச் செய்தல், சமூகத்தோடு மீண்டும் இணைந்து வாழ்கிற சூழல்களை உருவாக்குதல், அது இயலாமல் போகிற நிலையில் நீண்டகால பராமரிப்பு, இவர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை உடனடியாகப் பதிவு செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள், இவர்களுக்கான சிறப்புப் பணியாளர் பிரிவுகளை ஏற்படுத்துதல், மனநலம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் வரைவறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
இந்தியாவில் சுமார் 17,70,000 பேர் வீடற்றவர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது, அவர்களில் சுமார் 30 சதவிகிதத்தினர் மனநலம் குன்றியவர்கள், இவர்கள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்றும் வரைவறிக்கையில் கூறப்பட்டிருப்பது, மேலோட்டமாகப் படித்துப் பார்க்கிறபோது தெரிகிறது. இவர்கள் சட்டத்தை மீறிச் செயல்படுகிறவர்கள், சமூகத்தில் இடையூறு ஏற்படுத்துகிறவர்கள் என்ற காலனியாட்சிக் கால பார்வைகள் இப்போதும் தொடர்வதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவர்களுக்கு உரிய சட்ட உதவிகள் கிடைப்பதில்லை என்றும் கூறுகிறது. சரியான அணுகுமுறைகளையும் சட்டபூர்வ மாற்று வழிகளையும் பரிந்துரைக்கிறது.
இவர்கள் மீது அக்கறை உள்ளவர்கள் இப்படிப்பட்ட கொள்கை வரைவறிக்கையை மனமுவந்து வரவேற்கவே செய்வார்கள். அறிக்கையை முழுமையாகவும் ஆழமாகவும் படித்தால் இன்னும் ஆக்கபூர்வமான பரிந்துரைகள் இருப்பதும் பற்றாக்குறைகளும் தெரிய வரலாம், புதிய ஆலோசனைகளைப் பரிந்துரைக்கத் தோன்றலாம். சென்னையில் சென்ற ஆண்டு ஜூலையில், இத்தகையவர்களை மீட்பதற்கான இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. அந்த அனுபவம் கொள்கையைச் செழுமைப்படுத்துவதில் உதவியாக அமையலாம்.
**மக்களுக்கே தெரியாமல்…**
சிக்கல் என்னவென்றால் இப்படி ஒரு வரைவறிக்கை வந்திருப்பது பொதுமக்களுக்குத் தெரியாது என்பதுதான். ஏற்கெனவே இத்துறையில் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்களை தவிர வேறு யாரும் தெரிந்துகொள்ள முடியாத வகையில், இணையத்தில் வெளியிட்டிருப்பதோடு சரி. இவ்வாறு வெளியிடப்பட்ட செய்தியும் பொதுமக்களுக்குச் சொல்லப்படவில்லை.
மேலும் ஏப்ரல் 19 அன்று இணையத்தில் வெளியிடப்பட்ட வரைவறிக்கை குறித்த கருத்துகளை ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டுமென்றும் முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்படி என்ன அவசரம்? தொண்டு நிறுவன அமைப்புகளானாலும் சரி, தனிப்பட்ட அக்கறையாளர்களானாலும் சரி… இத்தனை பக்கங்கள் கொண்ட அறிக்கையைப் படித்து விவாதிப்பதற்கும் கருத்துகளை உருவாக்கிக்கொண்டு தெரிவிப்பதற்கும் ஒரு வார கால அவகாசம் எப்படிப் போதுமானதாக இருக்கும்? கால அவகாசத்தை நீட்டிக்கக் கோரினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
இந்தப் பிரச்சினை எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, கருத்துகளைத் தெரிவிப்பதற்கான தேதி மே 18 என மாற்றப்பட்டிருப்பதை என்எச்எம்-தமிழ்நாடு இணையப் பக்கத்தில் காண முடிகிறது. விமர்சனத்துக்கு இவ்வாறு உடனடியாக எதிர்வினையாற்றியிருப்பது பாராட்டுக்குரியதுதான். ஆனால், இது கூட எப்படிப் போதுமான கால அவகாசமாக இருக்க முடியும்?
இது மட்டுமே பிரச்சினை அல்ல. இன்னொரு முக்கியமான பிரச்சினை – வரைவறிக்கை ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பது. தமிழக அரசின் அருமையானதொரு முயற்சி ஆங்கிலம் அறிந்தவர்களோடு சுருங்கிப்போவது சரிதானா? இந்தக் களத்தில் செயல்படக்கூடிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலம் அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள், அவர்கள் மட்டும் படித்துக் கருத்துக் கூறினால் போதுமென்ற பார்வையிலிருந்து இது வந்ததா? “தமிழிலும் வெளியிட்ட பிறகுதான் கால அவகாசத்தையே அறிவித்திருக்க வேண்டும்” என்கிறார் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.நம்புராஜன். “களப்பணியாற்றுவோர் உட்பட பல தரப்பினரும் பங்கேற்கக்கூடிய கருத்துக் கேட்புக் கூட்டத்தை அரசு நடத்த வேண்டும்” என்றும் அவர் கோருகிறார்.
என்எச்எம் – தமிழ்நாடு இணையப் பக்கத்தின் வரைவறிக்கை ஆவணத்தின் முகப்பில், தேதி மாற்றப்பட்டிருப்பதோடு, அறிக்கையைத் தமிழில் வெளியிடுவதற்காக நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஒரு குறிப்பும் தற்போது சேர்க்கப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டு தமிழில் தயாரித்து, பல தரப்பினரும் படித்துக் கருத்துக் கூறத்தக்க ஏதுவாக கால அவகாசம் மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்பட வேண்டும்.
இந்தப் பிரச்சினையை முதலில் கவனத்திற்குக் கொண்டுவந்தவரான மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா, “குறிப்பாக சமூகநலத் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, கல்வித் துறை, ஏன் தெருவில் இத்தகையவர்களை அன்பாகவோ அடித்தோ கையாளுகிற காவல் துறையைச் சேர்ந்தவர்களும் வரைவறிக்கையைப் படிக்க வேண்டும், தங்கள் கருத்துகளைக் கூற வேண்டும்” என்கிறார்.
மனநோயர்களை வீட்டில் வைத்துப் பராமரிக்கிறவர்கள், தெருவில் உணவு வழங்குகிறவர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கருத்துக்கூற வேண்டும். அதற்கு வழி செய்யும் வகையில் பொதுமக்கள் கவனத்துக்கு ஊடகச் செய்திகள் உள்ளிட்ட பல வடிவங்களில் கொண்டுசெல்ல வேண்டும். வேர்மட்ட ஜனநாயகம் இப்படியும் கவனத்தில் கொள்ளப்படுமானால் இதிலேயும் ஒரு முன்னோடி முத்திரையைத் தமிழகம் பதிக்க முடியும்.
இன்னுமொரு முக்கியமான பிரச்சினை இருக்கிறது. “அறிக்கையின் கணிசமான பகுதிகள் மருத்துவத் துறை சார்ந்த சொல்லாடல்களோடு இருக்கின்றன. மருத்துவர்களே கூட நிதானமாகப் படித்தாக வேண்டிய நிலை. வெளிநாட்டு வல்லுநர்களும் பங்களித்திருப்பது உலகளாவிய பார்வையோடு அறிக்கையைத் தயாரிக்க உதவியிருக்கிறது – அது புரிந்துகொள்ளத்தக்கது, வரவேற்கத்தக்கது. ஆனால் என்ஜிஓக்களை மட்டுமே இலக்கு வைத்து தயாரிக்கப்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது. ஒரு மேட்டிமைத்தனத்தோடு அறிக்கை அமைவது பொதுமக்களை விலக்கியே வைக்கும்” என்று செல்வா கூறுகிறார்.
விமர்சனங்களுக்கு உடனடியாக எதிர்வினையாற்றி, தேதியை நீட்டித்து, தமிழில் வெளியிட முயற்சிகள் நடப்பதாகவும் அறிவித்துள்ள என்எச்எம் – தமிழ்நாடு இந்தக் கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டு, அறிக்கையை விரைவில் தமிழில் கொண்டு வர வேண்டும். இதில் கவுரவப் பிரச்சினை ஏதுமில்லை, எனவே கால அவகாசத்தைப் பொருத்தமான முறையில் மேலும் நீட்டிக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால், வீடற்றுத் திரிய வைக்கப்பட்டுள்ள மனநோயர்கள் வாழ்வில் ஒரு வெளிச்சம் பாய்வதோடு, மக்கள் பங்கேற்போடு ஒரு கொள்கை உருவாக்கப்பட்டது என்ற முன்மாதிரியை நிலைநாட்டிய பெருமையும் தமிழகத்தை வந்து சேரும்.
கட்டுரையாளர் **அ.குமரேசன்**
இதழாளர், மொழிபெயர்ப்பாளர், அரசியல் விமர்சகர். 30 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் அனுபவம் வாய்ந்தவர். ஆறு நூல்களை எழுதியுள்ள இவர் 25க்கும் மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்திருக்கிறார். தீக்கதிர் இதழ் சென்னைப் பதிப்பின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி அண்மையில் ஓய்வுபெற்றவர்.
.