pமகாராஷ்டிராவில் இன்றுமுதல் முழு ஊரடங்கு!

Published On:

| By Balaji

கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

மகாராஷ்டிராவில் நேற்று மட்டும் 67,468 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 568 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று(ஏப்ரல் 22) முதல் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும், இன்று இரவு எட்டு மணியிலிருந்து மே மாதம் ஒன்றாம் தேதிவரை ஊரடங்கானது அமலில் இருக்கும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஊரடங்கு அமலில் இருக்கும்போது பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்:

திருமண விழாக்கள் மண்டபத்தில் ஒரே நிகழ்வாக இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடக்கக் கூடாது. 25 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதை மீறுவோர்களுக்கு ரூ .50,000 அபராதம் விதிக்கப்படும். அவசரகால அல்லது அத்தியாவசிய சேவைகள் தவிர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு அனுமதி கிடையாது.

அரசு அலுவலகங்கள் 15% ஆட்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி. உள்ளூர் ரயில்கள், பெருநகரங்கள் மற்றும் மோனோரயில் சேவைகளிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில், அரசு அலுவலர்கள், மருத்துவ துறையில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தாங்களாகவே முன்வந்து முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்கவும், அத்தியாவசிய தேவையன்றி யாரும் வெளியே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

**டோக்கன் முறை**

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பெங்களூருவில், சடலங்களை எரிக்க டோக்கன் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு சராசரியாக நாள்தோறும் 15 ஆயிரத்திற்கும் மேல் இருக்கிறது. குறிப்பாக பெங்களூருவில் மட்டும் நாள்தோறும் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் 147 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பெங்களூருவில் மட்டும் 97 பேர் உயிரிழந்தனர்.

பெங்களூருவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மின் மயானத்தில் எரிக்கப்படுகிறது. பெங்களூருவில் 8 மின் மயானங்கள் உள்ளன. இங்கு நாள் ஒன்றுக்கு அதிகப்படியாக 20 சடலங்கள் மட்டுமே எரிக்க முடியும். சுமனஹள்ளி மற்றும் கூடலு பகுதியில் உள்ள மின் மயானத்திற்கு அதிகளவில் சடலங்கள் வருவதால், சடலங்களை எரிக்க டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

**வினிதா**

.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share