மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 22 எம்.எல்.ஏ.க்களோடு விலகிய ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாஜக பக்கம் சாய்ந்ததை அடுத்து, அம்மாநிலத்தில் நிச்சயமற்ற அரசியல் சூழல் நிலவுகிறது.
சிந்தியாவின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் பெங்களூருவில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்த காங்கிரஸ் கட்சி சஜ்ஜன் சிங் வர்மா உள்ளிட்ட தலைவர்களை அங்கே அனுப்பியது. இன்று காலை பெங்களூருவில் சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என சொல்லப்படும் 19 பேரை சந்தித்த சஜ்ஜன் சிங் வர்மா இதுகுறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசுகையில்,
“நான் சந்தித்த 19 எம்.எல்.ஏ.க்களில் யாரும் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுடன் செல்லத் தயாராக இல்லை. தாங்கள் தவறாக வழிகாட்டப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், பாஜகவுடன் சேர தங்களுக்கு விருப்பமில்லை என்றும் அவர்களில் பெரும்பாலானோர் கூறினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் மத்தியப் பிரதேச அரசியல் நெருக்கடி குறித்து முழுதாய் இரண்டு நாட்கள் கழித்து இன்று (மார்ச் 11) காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருக்கிறார்.
இன்று அவர் ட்விட்டரில் நேரடியாக பிரதமருக்கு கேள்வி ஒன்றைக் கேட்டுள்ளார். “மத்தியப் பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையை குலைக்க, நீங்கள் மும்முரமாக இருந்தபோது, உலகளாவிய எண்ணெய் விலையில் 35% சரிவு ஏற்பட்டதை நீங்கள் கவனிக்கவில்லை. பெட்ரோல் விலையை லிட்டருக்கு 60 ரூபாய்க்குக் குறைப்பதன் மூலம் இந்தியர்களுக்கு கிடைக்கும் நன்மையை தயவுசெய்து வழங்க முடியுமா? இது ஸ்தம்பித்த பொருளாதாரத்தை உயர்த்த உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.
**-வேந்தன்**�,