மோடி, அமித் ஷாவை சந்திப்பேன்: மதுரை ஆதீனம்

தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல மதுரை ஆதீனம் நேற்று (மே 4) சென்றிருந்தார்.
அப்போது தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஆதீனம், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் இதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மதுரை ஆதீனத்தின் நிர்வாகத்துக்கு உட்பட்ட கஞ்சனூர் அக்னீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்துக்கு சொந்தமான நிலங்களை குத்தகைக்கு எடுத்தவர்கள் ஆதீனத்துக்கு எந்த குத்தகையும் செலுத்துவதில்லை. இதுகுறித்து விசாரிக்க மதுரை ஆதீனம் கஞ்சனூர் சிவன் கோயிலுக்குள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் சிலர்.
இது பற்றி செய்தியாளரிடம் பேசிய மதுரை ஆதீனம், “அந்தக் கோயிலின் சுவரில் இருக்கும் சுண்ணாம்பைக்கூட தொடவிட மாட்டோம் என்று என்னை ஆளுங்கட்சியினர் மிரட்டுகிறார்கள். அந்தக் கோயிலுக்குரிய சொத்துகளை அடைவதற்காகவே என்னை மிரட்டுகிறார்கள். முன்பு இருந்த சன்னிதானம் இதைக் கேட்கவில்லை. அவரையும் மிரட்டிவிட்டார்கள். நான் உயிரே போனாலும் பரவாயில்லை என்று அங்கே செல்வதால், என்னை மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இப்படியே இன்னும் மிரட்டிக்கொண்டிருந்தால் இது விஷயமாக நான் உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் பிரதமர் மோடியும் சந்தித்து முறையிடுவேன்” என்று கூறியிருக்கிறார் மதுரை ஆதீனம்.
**வேந்தன்**

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts