மதுபோதையில் வாகனம் ஓட்டினால் கைது செய்ய வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சாலை விபத்தில் காயமடைந்த மணிகண்டன் என்பவர் தனக்கு வழங்கப்பட்ட 4,37,950 ரூபாய் இழப்பீட்டுத் தொகையை அதிகரித்துத் தரக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, காப்பீட்டு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மணிகண்டன் மதுபோதையில் வாகனம் ஓட்டிச்சென்று விபத்தில் சிக்கினார். தற்போது அவருக்கு எந்த ஊனமும் இல்லை” என்று தெரிவித்தார். எனினும், மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்கான எந்த ஆவணங்களையும் காப்பீட்டு நிறுவனம் சமர்ப்பிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மணிகண்டனை நேரில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டனர். அதன்படி ஆஜர்ப்படுத்தப்பட்ட மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூளையில் அடிபட்டு 100 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிக்கை அளித்தனர்.
இந்த வழக்கு மீண்டும் இன்று (மார்ச் 12) விசாரணைக்கு வந்தபோது, மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை 67,35,000 ரூபாயாக உயர்த்தி வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
“மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்வதுடன், அவர்களின் லைசென்ஸை ரத்துசெய்ய வேண்டும். மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க, காவல் துறையினர் தனிப்பிரிவை உருவாக்க வேண்டும். வாகன ஓட்டிகள் மதுபோதையில் செல்கிறார்களா இல்லையா என்பதை கண்டறிய போதுமான அளவுக்கு மூச்சுப் பரிசோதனை கருவிகளை காவல்துறைக்கு வழங்க வேண்டும். கைது செய்யப்படுபவர்கள் குறித்த அறிக்கையை மாதந்தோறும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், மது போதையில் வாகனங்களை இயக்க முடியாத வகையில், வாகனங்களில் பிரத்யேக கருவிகளை பொருத்தும்படி வாகன உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடுவது தொடர்பாக மத்திய அரசு பரீசிலிக்க வேண்டுமென யோசனை தெரிவித்தனர்.
இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் ஏப்ரல் 6ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
**எழில்**�,