அதிமுகவின் அடுத்த அவைத் தலைவர்: ஓபிஎஸ் – இபிஎஸ் வியூகம்!

politics

அதிமுகவின் அவைத் தலைவரான மதுசூதனன் நேற்று (ஆகஸ்ட் 5) தனது 80ஆவது வயதில் மறைந்த நிலையில் அவரது மறைவு அதிமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுசூதனன் மறைவை ஒட்டி அதிமுக மூன்று நாட்கள் துக்கம் அனுசரித்து, கட்சியின் நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளது. அதேநேரம் அடுத்த அவைத் தலைவர் யார் என்ற விவாதம் அதிமுகவில் ஆரம்பித்துவிட்டது.

மதுசூதனன் கடந்த சில ஆண்டுக் காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் மாத்திரையும் மருந்துமாக இருந்து வந்தவர். கடந்த ஜூலை 19ஆம் தேதி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்று மாலையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்குச் சென்று மதுசூதனனைச் சந்தித்து நலம் விசாரித்துட்டு வந்தார். மறுநாள் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவரைத் தொடர்ந்து அதிமுக கொடி பறந்த காரில் வந்த சசிகலா மதுசூதனனையும் அவரது குடும்பத்தார்களையும் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டுத் திரும்பினார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் 4ஆம் தேதி, அதிமுக அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தது. மதுசூதனன் உடல்நிலை மோசமாக இருந்ததால் கூட்டத்தை கேன்சல் செய்தனர். தலைவர்கள் யாரும் வெளியில் போகாமல் சென்னையில் இருக்கச் சொல்லியிருந்தார் எடப்பாடி பழனிசாமி.

நேற்று 5ஆம் தேதி மதியம் மதுசூதனன் இறந்துவிட்டார் என அதிகாரபூர்வமாக அறிவித்தது மருத்துவமனை நிர்வாகம். சசிகலா இன்று 6ஆம் தேதி காலை 5.00 மணிக்கும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் காலை 7.00 மணிக்கு அஞ்சலி செலுத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.

நேற்று இரவு 8.00 மணி வரையில் உறவினர் உடலை வாங்காததால் மருத்துவமனை நிர்வாகம் மதுசூதனன் உடலை மார்ச்சுவரியில் வைத்துவிட்டது. அதிமுகவின் அவைத்தலைவர் இரட்டை இலை சின்னத்தின் உரிமையை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்ற மதுசூதனன் உடலை உறவினர்களும் வாங்கவில்லை. கட்சியினரும் வாங்கவில்லை.

என்ன காரணம் என்று விசாரித்தோம்?

“மருத்துவமனை பில் சுமார் 47 லட்சம் ரூபாய் வந்துள்ளது. அதை யார் கட்டுவது, உறவினர்களா, கட்சியா அல்லது சசிகலாவா என்ற போட்டாபோட்டி போய்க்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மதுசூதனன் குடும்பத்தினர் சொத்துகளை பங்கு பிரிக்க மருத்துவமனையிலேயே சத்தம் போட்டு பேசிவருகிறார்கள். மதுசூதனனுக்கு லாவண்யா மற்றும் ரம்யா என இரண்டு வளர்ப்பு பிள்ளைகள். மதுசூதனன் சகோதரர்கள் இருவர். அவரது பாசமான மனைவியின் உறவினர்கள் என ஒரு கும்பல் சொத்துக்கு உரிமைக் கொண்டாடி பங்கு கேட்டு வருகிறார்கள்.

குடும்பத்தில் சொத்து பிரச்சினை என்றால், அதிமுக கட்சியில் மதுசூதனன் வகித்துவந்த பதவியை யார் வகிப்பது என்ற யுத்தம் நடந்து வருகிறது.

எடப்பாடி தரப்பினர், ஓ.பன்னீர்செல்வம் அவைத்தலைவராகவும், எடப்பாடி பொதுச்செயலாளராக இருக்கட்டும், துணைப் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி சி.வி.சண்முகம் அல்லது கே.பி.அன்பழகனுக்கு வழங்கலாம் என்று பேசி வருகிறார்கள். தங்கமணியும் அவைத் தலைவர் பதவியை விரும்புகிறார்.

ஓ.பன்னீர்செல்வமோ அவைத்தலைவர் பதவிக்கு பொன்னையனை முன்னிலைப்படுத்துகிறார். மௌனமாக இருந்துவந்த ஓபிஎஸ் நேற்று அவரது ஆதரவாளர்களிடம் மனம்விட்டுப் பேசியுள்ளார்.

‘பாஜக தலைமை என்னை ஏதாவது ஒரு மாநிலத்துக்கு கவர்னராக நியமிக்கவும், மகன் ரவீந்திரநாத்துக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கவும் திட்டமிட்டிருந்தது. ஆனால் அதைக் கெடுத்தது எடப்பாடி பழனிசாமிதான். அப்படி விட்டிருந்தால் கட்சித் தலைமையை விட்டுக்கொடுத்து போயிருப்பேன்’ என்று பேசியிருக்கிறாராம் ஓபிஎஸ்.

இதற்கிடையே அதிமுகவின் சீனியர்கள் சிலர் நம்மிடம்,

“அதிமுகவின் சட்ட விதிகள்படி பொதுச் செயலாளர், அவைத் தலைவர், பொருளாளர் ஆகிய மூன்று பதவிகள்தான் முக்கியமானவை. இவர்கள் இப்போது உருவாக்கிய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இடைக்கால ஏற்பாட்டை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கு நடக்கிறது.

எனவே இப்போதைக்கு அதிமுகவின் அதிகாரபூர்வ பதவிகளான பொதுச் செயலாளர், அவைத் தலைவர் ஆகிய பதவிகளில் யாரும் இல்லை. தானே பொதுச் செயலாளர் என்று சொல்லி வரும் சசிகலாவை கட்சி இன்னும் ஏற்கவில்லை. மிச்சமிருக்கும் ஒரே பதவி பொருளாளர் பதவிதான். அதில் இன்னமும் ஓ.பன்னீர்செல்வம்தான் நீடித்து வருகிறார். பொதுச் செயலாளர், அவைத் தலைவருக்கு அடுத்து முக்கியமான பதவி என்பதால்தான் ஒருங்கிணைப்பாளரான போதும், அந்த பொருளாளர் பதவிக்கு வேறு யாரையும் நியமிக்காமல் தொடர்ந்து தானே இருந்து வந்தார் ஓ.பன்னீர் செல்வம். எனவே அதிமுகவின் அதிகாரபூர்வ பதவிகளில் தற்போது இருக்கும் ஒரே பதவியான பொருளாளர் பதவியை வைத்திருக்கும் ஓபிஎஸ்ஸின் செயல்பாடு என்ன என்பதைப் பொறுத்துதான் அதிமுகவின் அடுத்த கட்டம் இருக்கிறது” என்கிறார்கள்.

**-வணங்காமுடி வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.