7 பேர் விடுதலை – ஜனாதிபதிக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டது எப்போது?

politics

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகள் அனைத்தும் ஜனவரி 27ஆம் தேதி ஆளுநரிடம் இருந்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 7 பேர் 30 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் பேரறிவாளன் தற்போது உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஜாமீனில் வெளியே உள்ளார்.

இதனிடையே 7 பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ஆம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி செப்டம்பர் 11ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது.

இந்நிலையில் தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் ஒருவரான நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அதில், ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பான தீர்மானம் தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு 42 மாதங்களாகியும் ஆளுநர் இந்த தீர்மானத்தை நிலுவையில் வைத்திருப்பது சட்டவிரோதமானது. எனவே ஆளுநரின் ஒப்புதலுக்குக் காத்திருக்காமல் அமைச்சரவை தீர்மானத்தின்படி என்னை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையிலிருந்து வருகிறது.

இவ்வழக்கு கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி பேரறிவாளன் மற்றும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளார் என்று தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் எந்த தேதியில் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பினார் என கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இவ்வழக்கு மீண்டும் இன்று(ஏப்ரல் 21) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் ஜனவரி 27-ஆம் தேதி ஆளுநர் அலுவலகத்திலிருந்து குடியரசுத் தலைவருக்கு ஆவணங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், நளினியின் மரண தண்டனை தமிழக அரசாலும் பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனை உச்ச நீதிமன்றத்தாலும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அரசால் தண்டனை குறைப்பு செய்யப்பட்ட தன்னை விடுதலை செய்ய அரசு முடிவு எடுத்த பிறகு அதற்கு ஒப்புதல் அளிக்காமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு நாளும் சட்டவிரோத காவலில் இருப்பதாகத் தான் கருத வேண்டும் என்று தெரிவித்தார்.

அதோடு தடா சட்டப்பிரிவுகளின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள நிலையில் இந்த விவகாரத்தைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது ஏன் என்றும் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தடா சட்டப்பிரிவுகளின் கீழ் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் நளினி உச்ச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டாரா என விளக்கம் அளிக்க நளினி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *