yபட்ஜெட்-வேளாண் மண்டலம்: எழும் புதிய சந்தேகம்!

Published On:

| By Balaji

காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக புதிய சந்தேகத்தை விசிக தலைவர் திருமாவளவன் எழுப்பியுள்ளார்.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படுவதாகவும், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மாட்டோம் எனவும் சேலம் மாவட்டம் தலைவாசலில் கடந்த 9ஆம் தேதி நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசுதானே அறிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியதோடு, இதுதொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி பெற்றதா என்றும் கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து காவிரி வேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்திய கடிதத்தை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டார்.

இந்த நிலையில் வேளாண் மண்டலம் தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவனும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று (பிப்ரவரி 16) அவர் தனது முகநூல் பக்கத்தில், “ பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க இருக்கிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். ஆனால், பட்ஜெட்டில் வேளாண் மண்டலமாக மாற்றப் பாடுபடுவோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

**த.எழிலரசன்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share