ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தூத்துக்குடி வேதாந்தா காப்பர் நிறுவனம் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 27) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
நேற்று சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின்படி, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் தயாரிக்க மட்டும் நான்கு மாதங்களுக்கு அனுமதித்துள்ளதாக தமிழக அரசுத் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும், “தூத்துக்குடி மக்களுக்கு ஸ்டெர்லைட் ஆலையின் மீது நம்பிக்கை வரவில்லை. ஆனாலும் ஆக்ஸிஜன் தயாரிப்பது என்ற ஒற்றை நோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆக்ஸிஜன் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன”என்றும் தெரிவித்தது தமிழக அரசு.
இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைத் தொடங்கியவுடன் ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா, “ஸ்டெர்ட்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன் மத்திய அரசிடமே ஒப்படைக்கப்பட வேண்டும். மத்திய அரசு அதை பல்வேறு மாநிலங்களுக்கும் பிரித்துக் கொடுக்கும்”என்று வாதிட்டார். இது நேற்று தமிழக அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத் தீர்மானங்களுக்கு எதிராக இருப்பது குறிப்பிடத் தக்கது.
விசாரணையின் போது கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு இப்போது தரப்பட்டுள்ள அனுமதியை வைத்து ஆக்ஸிஜன் மட்டுமே தயாரிக்க வேண்டும். வேறு எந்த உற்பத்தியிலும் ஈடுபடக் கூடாது”என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.
விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது.
**-வேந்தன்**
�,