�பத்தாவது முறை களம் காணும் பொன்.ராதாகிருஷ்ணன் -காங்கிரஸ் வேட்பாளர் யார்?

politics

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலோடு கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி குமரி தொகுதியின் பாஜக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், 2019 தேர்தலில் குமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தவருமான பொன்.ராதாகிருஷ்ணனே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

நாளை (மார்ச் 7) உள்துறை அமைச்சர் அமித் ஷா கன்னியாகுமரிக்கு வர இருக்கும் நிலையில், இன்று (மார்ச் 6) குமரி மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

1991 ஆம் ஆண்டு முதன் முதலில் நாகர்கோவில் மக்களவை தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார் பொன்.ராதாகிருஷ்ணன். அதில் இருந்து தொடர்ச்சியாக 96, 98, 99 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டார். 99 ஆம் ஆண்டு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004, 2009 தேர்தல்களிலும் குமரியில் போட்டியிட்டார், 2014 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸின் வசந்தகுமாரிடம் வெற்றிவாய்ப்பை இழந்தார். இதுவரை எட்டுமுறை எம்பி தேர்தலில் போட்டியிட்ட பொன்.ராதாகிருஷ்ணன் இருமுறை வெற்றிபெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார், எம்பி தேர்தலில் எட்டுமுறை சட்டமன்ற தேர்தலில் ஒருமுறை என ஒன்பது தேர்தல்களில் களம் கண்டுள்ள பொன்.ராதாகிருஷ்ணன் இப்போது பத்தாவது முறையாக தேர்தல் களம் காணுகிறார்.

1979 முதல் ஆர்.எஸ்.எஸ்.ஊழியராக பணியாற்றி வரும் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக நாளை அமித் ஷா பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

இந்நிலையில் எதிரணியான காங்கிரஸின் குமரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும் பட்சத்தில் அந்த அணியில் காஙகிரஸுக்குத்தான் குமரி சீட் ஒதுக்கப்படும். அங்கே எம்பியாக இருந்து காலமான வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தை தொகுதியில் நிறுத்தி அனுதாப வாக்குகளைப் பெற்று தொகுதியை தக்கவைக்க காங்கிரஸ் மேலிடம் ஆர்வம் காட்டி வருகிறது. இதை உறுதிசெய்யும் விதமாக அண்மையில் குமரி வந்த ராகுல் காந்தி, வசந்தகுமாரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினரிடம் ஐந்து நிமிடங்களுக்கும் மேல் பேசிச்சென்றார்.

தமிழக காங்கிரஸ் பொருளாளரான ரூபி மனோகரன் ஏற்கனவே நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டவர். அவரும் குமரி மக்களவை தொகுதி மீது ஒரு கண் வைத்துள்ளார். ஆனால் அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடும் என்கிறார்கள் பவன் வட்டாரத்தில்.

கன்னியாகுமரி மக்களவைத்தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, ,கிள்ளியூர் என ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த ஆறு தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி வாகை சூடியது.

கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வசந்தகுமார், பாஜக வேட்பாளரான, பொன். இராதாகிருஷ்ணனை, 2,59,933 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

இந்த தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுவிட்டது.ஆனால் காங்கிரஸ் திமுக கூட்டணி முடிவுக்கு வராமல் உள்ளது.

ஏற்கனவே ராகுல்காந்தி இத்தொகுதியில் பிரச்சாரம் செய்து சென்ற நிலையில் நாளை மார்ச் 7 பிஜேபி சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.

**சக்தி பரமசிவன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *