நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை பணிக்கு அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர மற்ற அனைத்துக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளின்போது பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி,ஊரக வளர்ச்சித்துறை சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், “நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சளி, இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ள நபர்களை வேலைக்கு அனுமதிக்கக் கூடாது.
மேலும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், சர்க்கரை நோய் உள்ளிட்ட பாதிப்புள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை. பணியாளர்கள் சிறுகுழுவாக பிரிந்து வேலைசெய்யும்போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கண்டிப்பாக அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். பணியாளர்கள் அடிக்கடி கைகளை கழுவுவதற்கு சோப்பு, தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.
கொண்டு வரும் உணவுப் பொருட்களை மற்றவர்களுடன் பரிமாறக் கூடாது. ஒரு வாகனத்தில் அதிக மக்களை ஏற்றி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 45 வயதுக்கு மேற்பட்டவர்களை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்த வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு பணியாளர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
**வினிதா**
.�,