யஷ்வந்த் சின்ஹா மனு தாக்கல்: ராகுல் காந்தி, ராசா, திருமா பங்கேற்பு!

politics

வரும் ஜூலை 18 ஆம் தேதி நடக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக  முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு கடந்த 25 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று (ஜூன் 27) எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

திரௌபதி முர்மு வேட்பு மனு தாக்கலின் போது பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, தமிழகத்தில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம், தம்பிதுரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இன்று யஷ்வந்த் சின்ஹா  வேட்பு மனு தாக்கல் செய்தபோது, அவருடன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  எதிர்க்கட்சிகளில் முக்கியமான கட்சியான திமுக சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா கலந்துகொண்டார்.  திமுக சார்பில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலு. கனிமொழி ஆகியோரும் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் கனிமொழி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால் செல்லவில்லை. டி.ஆர்.பாலுவும் சில சொந்தக் காரணங்களால் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என்று திமுக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தை தலைவர் திருமாவளவனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

யஷ்வந்த் சின்ஹாவின் வேட்பு மனு தாக்கலில் மேலும்  சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர் அபிஷேக் பானர்ஜி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டைச் சேர்ந்த பரூக் அப்துல்லா, ஆர்எல்டி கட்சியின் ஜெயந்த் சின்ஹா, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி,  தெலுங்கானா அமைச்சரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி மூத்த தலைவருமான கே.டி.ராமா ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  ஆம் ஆத்மி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளை வேட்புமனு தாக்கல் நிகழ்வுக்கு அனுப்பவில்லை. எதிர்பாராத விதமாக சின்ஹாவுக்கு தெலங்கானா முதல்வர்  சந்திரசேகர ராவ் ஆதரவு தெரிவித்து தன் பிரதிநிதியையும் வேட்பு மனு தாக்கல் நிகழ்வுக்கு அனுப்பி வைத்தார். 
-**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0