`முன்கூட்டியே முடிந்த நாடாளுமன்றம்!

politics

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.

2020-21ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2ஆம் தேதி தொடங்கி நடந்துவந்தது. இதனிடையே நாடும் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவ தொடங்கியது. இதன் காரணமாக நாடாளுமன்றக் கூட்டத் தொடரைத் தள்ளிவைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. எனினும் கூட்டத் தொடரை ஒத்திவைக்க சபாநாயகர் ஓம் பிர்லா மறுத்தார்.

இந்தச் சூழலில் சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதால், சமூக தனிமைப்படுத்துதல் காரணமாகப் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.

இந்தப் பரபரப்பான சூழலில் நேற்று (மார்ச் 23) காலை மக்களவைக் கூடியது. கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதன் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான நிதி மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற சபாநாயகர் தலைமையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 40 திருத்தங்களுடன் கூடிய நிதி மசோதாவை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு நிதி மசோதா நிறைவேறியதாக சபாநாயகர் அறிவித்தார்.

பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியதும் நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்பு கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மத்தியிலும் அத்தியாவசிய சேவைகளை வழங்குவோருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி மற்றும் மக்களவை உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்.

பின்னர் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, “கொரோனா வைரஸ் காரணமாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். நிதி மசோதாக்கள் விவாதமின்றி அனைத்துக்கட்சி கூட்டத்தின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. தேதி குறிப்பிடாமல் அவையை ஒத்திவைக்கிறேன்” என்று அறிவித்தார்.

மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று பிற்பகல் 2 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார். அதில், மாநிலங்களவை பாஜக தலைவர் தாவர்சந்த் கெலாட், எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கொரோனா ஏற்படுத்தியுள்ள அவசர சூழலைக் கருத்தில்கொண்டு, கூட்டத் தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள அதில் முடிவு செய்யப்பட்டது. பதவிக்காலம் முடியும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்குப் பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது. இதன் பின்னர் மாநிலங்களவையைத் தேதி குறிப்பிடாமல் வெங்கய்ய நாயுடு ஒத்திவைத்தார்.

ஏப்ரல் 3ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற இருந்த நிலையில், 12 நாட்களுக்கு முன்பே முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

**-எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *