தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் பண்டிகைக் காலங்களில், கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தொடர்ந்து கண்காணித்துக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அண்டை மாநிலங்களில் நோய்த் தொற்று நிலையினைக் கருத்தில் கொண்டும், தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் 13.10.2021 அன்று ஆலோசனை நடைபெற்றது.
அதன்படி முக்கிய அறிவிப்புகளைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
அதில்,
பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடைகளுக்குச் செல்வதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் ஏற்கெனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11.00 மணிவரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மேலும் நவம்பர் 1ஆம் தேதி முதல், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்.
தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்படலாம்.
மழலையர் விளையாட்டுப் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாகச் செயல்படலாம். காப்பாளர், சமையலர் உட்பட அனைத்துப் பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி.
திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்கு பெற அனுமதி.
இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி.
திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**
�,