ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகும் ஊரடங்கு அவசியம்தானா என மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் 25ஆம் தேதி முதல் இதுநாள் வரை ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் என்கிற நடைமுறையும் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் இன்று காலை ஆலோசனை மேற்கொண்டார். அதன்பிறகு மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அதில் கொரோனாவைத் தடுப்பது குறித்தும் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது மேலும் தளர்வுகள் அளிப்பதா என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பாக அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் குமரவேல் இன்று (ஆகஸ்ட் 29) வெளியிட்ட அறிக்கையில், “கொரோனாவை பற்றி மருத்துவ உலகமே குழம்பித்தவித்த காலம் தாண்டி இப்போது மக்களே விழிப்புணர்வு பெற்றுவிட்டனர். இனியும் மக்களை ஊரடங்கு என்ற பெயரில் முடக்கிவைப்பது பொருளாதார சீர்கேடு என்ற அசாதாரண நிலையோடு, வேலைக்கு செல்ல இயலாத அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் அபாயக் கட்டத்திற்கு செல்லவே வழி வகுக்கும். எனவே வரும் ஆகஸ்ட் 31க்குப் பின் ஊரடங்கு தேவைதானா என அரசு பரீசிலிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மக்கள் வேலைக்கு செல்லும் வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும். அதற்கு இ பாஸ் தளர்வு மட்டும் போதாது என்ற குமரவேல், “ அரசு போக்குவரத்தை ஓரளவாவது இயங்க வழிவகை செய்ய வேண்டும். ஊரடங்கு பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் இதுகுறித்து நல்ல முடிவை எடுத்து அறிவிக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுக்கொள்கிறது” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கால் பெரும்பாலான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில், ஊரடங்கை ரத்து செய்ய வேண்டுமென தமிழக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
**எழில்**
�,