டிஜிட்டல் திண்ணை: உள்ளாட்சித் தேர்தல் -எடப்பாடி எடுத்த சர்வே!

Published On:

| By Balaji

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன்லைனில் வந்தது.

உள்ளாட்சித் தேர்தல் பற்றி ஆளுங்கட்சியின் வியூகங்களே வந்துகொண்டிருக்கும் நிலையில்… எதிர்க் கட்சியான அதிமுகவின் நிலை என்ன என்ற இன்ஸ்டாகிராமின் கேள்விக்கு வாட்ஸ்அப் பதிலை டைப் செய்யத் தொடங்கியது.

ஊரக உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இதில் பெரும்பாலான இடங்களை திமுகவே கைப்பற்றியது. அப்போது அதிமுக சார்பில் பல கட்ட தேர்தல் நடத்தியதும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதுமே திமுகவின் வெற்றிக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது.

இந்த நிலையில் வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி என்ற வகையில் திமுக தனது அதிகாரத்தை பயன்படுத்தும் என்பதால்தான் மத்திய துணை ராணுவ படையை உள்ளாட்சித் தேர்தலுக்கு பயன்படுத்துமாறு மாநில தேர்தல் ஆணையம் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுகவும் பாஜகவும் வலியுறுத்தின.

ஒருபக்கம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கட்சி ரீதியாக உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார்.

கடந்த வருடம் எடப்பாடி பழனிசாமியின் தாயார் காலமானதால் பொங்கல் பண்டிகையை கொண்டாடாத நிலையில்… இந்த வருடம் பொங்கலை தனது சிலுவம்பாளையம் கிராமத்தில் சிறப்பாகக் கொண்டாடினார் எடப்பாடி பழனிச்சாமி.

கொண்டாட்டங்கள் ஒருபக்கம் என்றாலும் தன் வீட்டில் இருந்தபடியே ஒவ்வொரு மாவட்ட செயலாளருக்கும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு உங்கள் பகுதிகளில் எப்படி இருக்கிறது, என்னென்ன குறைபாடுகள் இருக்கின்றன என்பதை எனக்கு புகைப்பட ஆதாரத்தோடு வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் என்று உத்தரவிட்டார்.

அதன்படியே தமிழகம் முழுவதிலிருந்தும் அவருக்கு வந்த தகவல்களின் படி… பல இடங்களில் அரசு அறிவித்த இருபத்தோரு பொருட்கள் இல்லை என்பதோடு… கொடுக்கப்பட்ட பொருட்களிலும் நிறைய குறைபாடுகள் இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் தமிழகம் முழுவதிலும் தனக்கு நெருக்கமான கட்சியில் பொறுப்பில் இல்லாத பிரமுகர்களிடமும் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பேசி வந்திருக்கிறார். அவர்கள் கொடுத்த தகவல்களின் படி…’ ‘கடந்த பொங்கலுக்கு அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் 2500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. அந்தப் பணம் அடித்தட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஊரடங்கை எதிர்கொண்டு பண நெருக்கடியில் இருந்த அடித்தட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமி அரசு அளித்த பொங்கல் பணம் 2500 ரூபாயில் பொங்கலை கொண்டாடியதோடு மட்டுமல்லாமல்… தங்கள் மகள்கள், சகோதரிகளுக்கு பொங்கல் சீர் கொடுக்கவும் அந்தப் பணம் பயன்பட்டது என்று சென்டிமென்டாக உணர்ச்சி வசப்பட்டார்கள். ஆனால் இந்த வருடம் பொங்கலுக்கு

தொகை இல்லாததோடு கொடுத்த பொங்கல் பொருட்களும் தரமற்றவையாக இருந்ததால் மக்கள் திமுக அரசின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள். இதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது’ என்று எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள் அவரிடம் ஏரியா வாரியாக தெரிவித்திருக்கிறார்கள்.

இதனால் பெரும் நம்பிக்கையான எடப்பாடி பழனிசாமி எடப்பாடியில் இருந்தபடியே பத்திரிக்கையாளர்களை அழைத்து பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று திமுக அரசுக்கு எதிராக புகார் தெரிவித்தார். ஆங்காங்கே பொங்கல் பரிசில் முறைகேடுகள் நடைபெற்றதை உணர்ந்த முதல்வர், எடப்பாடி குற்றம்சாட்டிய அடுத்த நாளே பொங்கல் பரிசு விநியோகம் பற்றி ஆய்வு கூட்டத்தை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் தரமற்ற பொருள்களை கொடுத்த கான்ட்ராக்டர்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்படுவார்கள் என்று கண்டிப்புடன் கூறினார் முதல்வர்.

இதையே தனக்கான வெற்றியாக எடுத்துக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களை மீண்டும் தொடர்பு கொண்டு…’நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நமக்கு பாதிக்குப் பாதி வெற்றி வாய்ப்பு உறுதியாக இருக்கிறது. எனவே திமுக அரசு என்னதான் அதிகாரத்தை பயன்படுத்தினாலும் மக்களிடம் பொங்கல் ரொக்கம், பொங்கல் பரிசு, பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஆகிய பிரச்சனைகள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. பிரச்சாரத்தில் இதை நாம் முழுமையாக மக்களிடம் கொண்டு சென்று நம் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும். அதேநேரம்

செலவு செய்யாமலும் இருந்துவிடக்கூடாது. எனவே நீங்கள் பணத்தைப் பற்றி கவலைப்படாமல் தேர்தலில் செலவு செய்யுங்கள்’ என்று விளக்கமாகக் கூறியிருக்கிறார் எடப்பாடி.

இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் நேர்காணல்களை தொடங்கிவிட்டனர். குறிப்பாக கோவை மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான நேர்காணலை நடத்திய முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி…’சட்டமன்ற தேர்தலில் நாம் பலமான எதிர்க்கட்சியாக செய்ததைப் போலவே… உள்ளாட்சி தேர்தலிலும் பெரிய வெற்றியைப் பெறமுடியும். பணத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள். நான் கவனித்துக் கொள்கிறேன். சட்டமன்றத்தில் அனைத்து தொகுதிகளையும் ஜெயித்த மாதிரி கோவையில் உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் ஜெயிக்க வேண்டும்’ என்று கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறார். வேலுமணி இவ்வாறு கட்சியினருக்கு உறுதி கொடுத்திருந்தாலும்… பல்வேறு மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள்… ‘எப்படியும் ஆளும் திமுக விரும்பியபடி தான் முடிவுகள் வரப்போகின்றன. இதற்கு நாம் ஏன் செலவு செய்ய வேண்டும்?’ என்ற மனநிலையிலேயே இன்னமும் இருக்கிறார்கள். இதுவும் எடப்பாடிக்கு தெரிந்து ஒவ்வொரு முன்னாள் அமைச்சரிடமும் மீண்டும் ஒரு முறை தொடர்பு கொண்டு நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான செலவுகளை கவனித்துக் கொள்ளுமாறும்… இந்த தேர்தலில் நாம் தோற்று விட்டால் கட்சியின் மீதான பிடியும் குறையும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எச்சரித்துள்ளார்” என்ற மெசேஜ் க்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share