கருவேல மரங்கள் அகற்றம்: ஒரு திட்டமாகவே செயல்படுத்தப்படும்!

Published On:

| By Balaji

தமிழ்நாடு முழுவதும் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப் பேரவையில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த ஒரு வாரமாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 28) வேளாண், கால்நடை, மீன்வளம் மற்றும் பால்வளத் துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.

அப்போது, திருவாடனை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராம.கரு.மாணிக்கம், ஆர்.எஸ்.மங்கலம் ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், உறுப்பினர் ராம.கரு.மாணிக்கம் பேசும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஏனெனில், இவருடைய தாத்தா, அப்பா, தற்போது இவர் என மூன்று தலைமுறைகளைப் பார்க்கிறேன்.

கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பதை ஆரம்பத்தில் இருந்து நான் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், பசுமை காடுகள் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு காலத்தில் ஏரிகளில் கருவேல மரங்களை நட்டு விட்டார்கள். அப்போதே இதை நான் எதிர்த்தேன். ஆனால் மரங்கள் நடப்பட்டுவிட்டதால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தற்போது தமிழ்நாடு முழுவதும் கருவேல மரங்கள் அதிகப்படியாக இருக்கின்றன. இந்த மரங்கள் மூலம் அதிகம் நீர் உறிஞ்சப்படுவதால், விளைநிலங்கள் தரிசாகி விடுவதுடன், முட்களும் பரவி விடுகிறது. இதனால் விவசாயம் செய்யமுடியாத சூழல் ஏற்படுகிறது.

சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று ஆர்.எஸ்.மங்கலத்தில் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது ஒரு திட்டமாகவே செயல்படுத்தப்படும். எனவே, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் மரங்களை வெட்டி அதன் வருவாயை எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. இடத்தை காலி செய்து கொடுத்தால் போதும்” என்று கூறி அமர்ந்தார்.

**-வினிதா**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share