சென்னையில் இன்று(ஏப்ரல் 2) பாமக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. வன்னியர் 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர் உச்ச நீதிமன்றங்கள் தீர்ப்பளித்த நிலையில் இந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது வன்னியர் இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடுதல் புள்ளி விவரங்களைத் திரட்டி புதிய சட்டம் இயற்றத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்து இதுதொடர்பாக வலியுறுத்த அன்புமணி ராமதாஸ் தலைமையில் எழுவர் குழு அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், “கல்வி மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் தான் வன்னியர் சமுதாயத்தை முன்னேற்ற முடியும் என்று கருதிய மருத்துவர் ராமதாஸ், 1980ஆம் ஆண்டில் தொடங்கி 43 ஆண்டுகளாக நடத்தி வரும் சமூகநீதிப் போராட்டத்தின் பயனாகவே வன்னியச் சமுதாயத்து மக்கள் ஓரளவாவது கல்வியையும், வேலைவாய்ப்புகளையும் பெற்றிருக்கின்றனர்.
வன்னியர்களுக்கான சமூக நீதி எளிதில் கிடைத்து விடவில்லை. 1987ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கப்பட்ட ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டத்தில் மட்டும் 21 உயிர்களைப் பலி கொடுத்தோம். அதன் பின்னர் இன்று வரையிலான இட ஒதுக்கீட்டுப் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை நூற்றுக்கும் கூடுதலாக இருக்கும்.
ஆனாலும், வன்னியர்கள் தியாகம் செய்து பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டின் பயன்கள் அவர்களுக்குக் கிடைக்காததால் தான், பாமக நிறுவனர் ராமதாஸ் வழிகாட்டுதலில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்ட இரண்டாம் அலை போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் பயனாகவே வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி புதிய சட்டம் இயற்றப்பட்டது.
அந்த சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இந்தத் தீர்ப்பைச் சமூகநீதிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக பாமக கருதுகிறது. இதைத் தமிழக அரசு சரி செய்ய வேண்டும் என்றும் கோருகிறது.
10.5% உள் இட ஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போதே, அதற்காகக் கூறப்பட்டுள்ள காரணங்கள் அநீதியானவை, உச்ச நீதிமன்ற விசாரணையில் அவை தள்ளுபடி செய்யப்படும் என்று ராமதாஸ் ஆதாரங்களுடன் விளக்கியிருந்தார். அவர் கூறியது தான் அப்படியே நடந்திருக்கிறது. வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாது என்பதற்காக உயர் நீதிமன்றம் முன்வைத்த 7 காரணங்களில் 6 தவறானவை என்று கூறி அவற்றை உச்சநீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.
வன்னியர்களின் கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பான சமீபத்திய புள்ளி விவரங்கள் இல்லை என்ற ஒற்றைக் காரணத்தைக் காட்டித் தான் வன்னியர்கள் 10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. அதே நேரத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை உச்ச நீதிமன்றம் எதிர்க்கவில்லை. மக்கள்தொகை தொடர்பான புள்ளி விவரங்கள் ஏற்கனவே இருக்கும் நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் எந்த அளவுக்கு பின்தங்கியிருக்கிறார்கள் என்பது குறித்த கூடுதல் புள்ளி விவரங்களைத் திரட்டி, புதிய சட்டத்தை இயற்றுவதன் மூலம் வன்னியர்களுக்கு மீண்டும் உள் இட ஒதுக்கீடு வழங்க முடியும். அது தான் இன்றைய முதன்மையான சமூகநீதித் தேவை ஆகும்.
வன்னியர்கள் மற்றும் பட்டியலின மக்களின் வாழ்நிலை கிட்டத்தட்ட ஒன்றாகத் தான் உள்ளன; சமுதாய படிநிலையைத் தவிர அவர்களிடம் வேறு எந்த வித்தியாசமும் இல்லை என சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேளாண் கூலிகள், கொத்தனார் – சிற்றாள் போன்ற கட்டட வேலைகள், கல் உடைத்தல், பாதுகாவலர்கள், கிணறு வெட்டுதல், நெசவு, பாய்முடைதல், கூடைப் பின்னுதல், மீன் பிடித்தல் போன்ற மிகக்குறைந்த கூலி வழங்கப்படும் மனித உழைப்பை அடிப்படையாகக் கொண்ட பணிகளை மட்டும் தான் வன்னியர்கள் செய்கின்றனர்.
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் வன்னியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்கள் தான் கடைசி 10 இடங்களைப் பிடித்துள்ளன. தமிழ்நாடு மாநில மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகள் வன்னியர் அதிகம் வாழும் மாவட்டங்கள் தான் கடைசி 5 இடங்களைப் பிடித்துள்ளன. தனிநபர் வருமானத்தில் வன்னியர் அதிகம் வாழும் வடக்கு மாவட்டங்களின் சராசரி தனிநபர் வருமானம் சென்னையின் சராசரி தனிநபர் வருமானத்தில் பாதிக்கும் குறைவாகத் தான் இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தின் தனிநபர் வருமானம் சென்னையின் தனிநபர் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு தான் உள்ளது.
அதே நேரத்தில் மது வணிகத்தில் வன்னியர்கள் அதிகம் வாழும் மாவட்டங்கள் தான் முதலிடத்தில் உள்ளன. வன்னியர்களால் கல்வி பெற முடியவில்லை; கடுமையாக உழைத்து ஈட்டும் வருவாயில் கூட பெரும் பகுதியை மதுவுக்காக செலவிடுவதால் அவர்களால் முன்னேற முடியவில்லை என்பதைத் தான் மேற்கண்ட புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன. இத்தகைய நிலையில் உள்ள வன்னியர் சமூகத்திற்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதன் மூலம் தான் அவர்களை முன்னேற்ற முடியும். அதனால் தான், வன்னியர்கள் இட ஒதுக்கீடு சாதி சார்ந்தது அல்ல…. அது அரசியல் பிரச்சினை, தமிழகத்தின் வளர்ச்சி பிரச்சினை என்று பா.ம.க. தொடர்ந்து கூறி வருகிறது.
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள், அருந்ததியர்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை பாமக போராடிப் பெற்றுக் கொடுத்தது. மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு முறையே 15%, 7.5% இட ஒதுக்கீட்டை அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மூலம் வழங்கி, நடைமுறைப்படுத்தியவர் ராமதாஸ் என்பதை எவராலும் மறுக்க முடியாது.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீட்டை, 2006-ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், அதன் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களுடன் சண்டையிட்டுப் பெற்றுத் தந்தவர் மருத்துவர் ராமதாஸ் தான். மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பாக முதலில் உச்சநீதிமன்றத்திலும், பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து பெற்றுத் தந்தவர்களில் முதன்மையானவர் அன்புமணி ராமதாஸ் தான்.
தமிழ்நாட்டில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமுதாயத்தினரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான புள்ளிவிவரங்கள் தமிழக அரசிடம் உள்ளன. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் அந்த புள்ளி விவரங்களைத் தொகுத்து, ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கான பரிந்துரை அறிக்கையைப் பெற வேண்டும்; அதன் அடிப்படையில் புதிய வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்ட முன்வரைவை மிக விரைவாகத் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை இந்த அவசர செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-பிரியா**