மகாராஷ்டிரா: ஆளுநருடன் பாஜக பட்னவிஸ் சந்திப்பு- அடுத்த ஆட்சிக்கு ஆயத்தம்! 

politics

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக நிலவி வரும் அரசியல் குழப்பத்துக்கு முடிவுகட்டும் விதமாக,  எதிர்க்கட்சித் தலைவரும்  முன்னாள் முதல்வருமான பாஜகவின் தேவேந்திர பட்னவிஸ் நேற்று (ஜூன் 28) இரவு ஆளுநரை சந்தித்துள்ளார். 

சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு, சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.  சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே  தலைமையில் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தனி அணியாக செயல்பட முடிவெடுத்துள்ளனர். அவர்களுடன் 10 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். இந்த சூழலில் சிவசேனாவின் அதிருப்தி எம்..எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்கம் செய்யப்பட வாய்ப்பு  இருப்பதை உணர்ந்து ஷிண்டே உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சிவசேனா அதிருப்தி பிரிவோடு இணைந்து பாஜக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று ஷிண்டே தரப்பிலேயே குரல்கள் எழுந்து வருகின்றன. ஆனால் பாஜக இதுவரை வெளிப்படையான நடவடிக்கைகள் மேற்கொள்ளாத நிலையில்…  முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் நேற்று அவசரமாக மும்பையில் இருந்து டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்தார்.முக்கிய ஆலோசனைக்குப் பிறகு நேற்று இரவே மும்பை திரும்பிய பட்னவிஸ் இரவு 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகைக்கு சென்றார். பட்னவிஸுடன் மகாராஷ்டிர  பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டீலும் ஆளுநரை சந்தித்தார்.

அப்போது  முதல்வர் உத்தவ் தாக்கரே பெரும்பான்மை இழந்ததால், உடனடியாக உத்தவ் தாக்கரேவை சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை பட்னவிஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் அடுத்த ஆட்சி அமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பது வெளிப்படையாக தெரிகிறது.

-**வேந்தன்**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *