ஸ்ரீராம் சர்மா
கல்வி, கல்வி மற்றும் கல்வி! கல்வி ஒன்றே கற்பகத்தரு!
கல்வியைக் கடந்த செல்வமொன்று இவ்வுலகில் இல்லவே இல்லை என தலைமுறையாக பறைசாற்றி வைத்தார்கள் நமது முன்னோர்கள்!
அருளுடைமை அதிகாரத்தில்…
“பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லாகியாங்கு” என முடியும் குறளை கல்வித்தளத்தில் வைத்து துளைத்துப் பார்த்தால்…
“பொருளற்ற சொற்கள் கல்வியற்றவர்களிடமே எழக்கூடும். அப்படியான மனிதர்களுக்கு இவ்வுலகம் நலம் பயப்பதில்லை” எனப் பொருள் கொள்ள முடிகிறது.
நேரடியாக கல்வி அதிகாரத்தில்…
**யாதானும் நாடாமல் ஊராமல் என்னொருவன்**
**சாந்துணையும் கல்லாத வாறு. **
என வியந்து கேட்கிறார் திராவிடத் தமிழ்ப் பேராசான் திருவள்ளுவர்.
பொய்யாமொழிப் புலவரின் குறளுக்கு நைய உரை கண்ட முத்தமிழறிஞர் கலைஞரும்…
“கற்றோருக்கு எல்லா நாடுகளிலும் – எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?” என்கிறார்.
திருக்குறளுக்கு எத்துணையோ பேர் உரையெழுதி இருந்தாலும் கலைஞரின் உரை தனித்துவமானது. காரணம், மற்றுளோர் சொற்பொருள் நயம் கண்டே உரை எழுதினார்கள்,
கலைஞரோ, மக்களாட்சியின் ஆழ அகலத்தை கண்ட பின் உரை கண்டார்.
அன்றெழுந்த அவரது உரையின் ஆதங்கத்தை அமர்த்தி வைப்பது போல, “இல்லம்தோறும் கல்வி” எனும் திட்டத்தை தமிழகத்தின் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று செயல்படுத்த…
அதை, கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் இன்முகத்தோடு சுற்றிச் சுழன்று நிறைவேற்றும் பாங்கு நிறைவு அளிக்கிறது. நெகிழ வைக்கிறது.
அவர் அமைச்சர் பதவியில் அமர வைக்கப்பட்டிருக்கிறார் என்பதைவிட அதிர வைக்கப்பட்டிருக்கிறார் என்றே கருத முடிகிறது.
இன்றளவில் பெரிதும் பாழ்பட்டிருப்பது கல்வித் துறை என்பதால், அதைச் சீர்படுத்திவிட்டால் அனைத்தும் சீராகிவிடக் கூடும் எனக் கருதித்தான்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தகப்பனுக்கே உரிய அதிரடிக் கெடுபிடியோடு அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அந்தத் துறைக்கு அமைச்சராக்கி ‘ஓடு, ஓடு’ என கடுமையாக உழைக்க சொல்லியிருக்கிறார் போலும் என எண்ணத் தோன்றுகிறது.
அந்த மனிதனும் பதவியேற்ற நாள் முதலாக ஓரிடத்தில் நிற்பதில்லை.
கோட்டூர்புர அண்ணா நூலகத்தில் ஓர் நிகழ்வு, தாம்பரத்தில், அடுத்து திருச்சியில், மற்றொரு நாள் தஞ்சை என தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று தன்னை நம்பிய தலைமைக்கு மெருகேற்றி வருகிறார்.
சார்பற்றதோர் சமூக எழுத்தாளனாக அந்த மாண்புமிகு மனிதனை தூரத்தே இருந்து கவனித்து வரும் எனக்கு அவர் ஆச்சரியமளிக்கிறார்.
அவரிடம். பாசாங்கில்லை. பொய்யில்லை. புகழுரைக்கு மயங்குவதில்லை. நாடி வரும் சகலரிடத்திலும் அன்பும், அணுக்கமும் காட்டுகிறார். அதன் மொத்த பலனையும் தன் இளைய தலைமைக்கு மடை மாற்றி வைக்கிறார்.
பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் 34 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட தருணத்திலும், அமைச்சர் என்னும் இறுமாப்பு இல்லாது – கடமைக்குரியவன் நான் என்னும் அடக்க முகபாவமே அந்த பொய்யாமொழியிடம் மெய்யாக மேலிட்டு நின்றதைக் காண முடிந்தது.
அவரது துறையின் முதன்மை செயலர் மரியாதைக்குரிய காகர்லா உஷா அவர்களின் ஊக்கச் செயல்பாடுகள் யாவும் தனது துறை அமைச்சர் மேல் அவர் கொண்ட நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பறைசாற்றுகிறது.
கற்றறிந்த – அனுபவம் மிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை வழிமொழிந்து ஆள்வது திமுக ஆட்சிக்கே உரிய பாங்கு. அதை உறுதிப்படுத்தி நிற்கிறார்.
தன் செய்கை எவருக்கும் அச்சத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. அன்பு மேலிட்டால் போதும் என்பதில் மிக கவனமாக இருக்கிறார். அது அன்பில் எனும் தந்தை வழி வந்த பரம்பரைக் குணம் போலும்…
இப்படியானதோர் அருமையான இளம் ஆளுமை தமிழக அரசாங்கத்துக்கு வாய்த்து விட்டது நிறைவுதான் எனினும், அவரிடம் சொல்லிக் கொள்ள சங்கதி ஒன்று உண்டு.
அமைச்சரே,
அரசாங்க ஊழியர்களில் தங்கள் தலைமைக்குட்பட்ட ஆசிரியர்களுக்கே அதிக பட்ஜெட் ஒதுக்கப்படுவதாகச் சொல்லப்படுவதை நீங்கள் அறிவீர்கள்.
ஆனால், அதற்கு அவர்கள் நியாயம் செய்தபடி நிற்கிறார்களா என்பது பெருங்கேள்வியாகிறது. அதைக் கேட்கும் உரிமை பெற்றோர்களுக்கும் உண்டு என்பதைப் புறந்தள்ளிவிட முடியாது.
“ஆசிரியம்” என்பது குண வழக்கமாகக் கொள்ளப்பட்ட காலம் எல்லாம் மலையேறிப் போக, இன்று அது ஒரு தொழில் ஆகிவிட்டது.
ஆக, பயனாளிகளான பெற்றோர்கள் அதுகுறித்து கேள்வி கேட்பது நியாயமாகிறது. பெற்றவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை துறை அமைச்சரான உங்களுக்கு உண்டு!
இன்றைய கல்வி போதனையில், ஆங்கிலத்தை செம்மையாக உச்சரிக்கும் பள்ளி மாணவர்கள் – அன்னைத் தமிழை மழுக்கிப் பேசுவதைக் கேட்க சகிக்கவில்லையே அமைச்சரே!
பெரும்பாலான ஆசிரியர்களின் நாவிலும் ‘லகர – ளகரம்’ நுழையவில்லை என்பது பெருங்கேடல்லவா? எனில், வருங்கால மாணவர்களின் தமிழ் என்னவாகும் எனப் பெற்றோர்கள் கவலைப்பட மாட்டார்களா?
அப்பாவி மாணவர்களுக்குத் தமிழை சிதைக்கும் நோக்கம் இருக்க முடியாது. தமிழை சரிவர பேச சொல்லித்தரத் தவறியது கல்வியாளர்களின் குற்றமே.
அதை ஏற்றுக்கொண்டு மாற்றிக்கொண்டாக வேண்டும் அல்லவா?
உலக மொழிகளில் தமிழின் சிறப்பாக நிற்பது ‘ழ’ கரம்! ஆனால், அது மட்டுமே நம் தமிழ் மொழியைச் சிறப்பாக்கி விடாது.
அதற்கிணையாக தமிழோட்டம் காண்பது ‘லகர’ – ‘ளகர’ உச்சரிப்பாகும்!
அந்த மூன்றையும் மொழியின்பால் சரிவர பொருத்திப் பேசும் வல்லமை பெற்ற ஆசிரியர்கள் இன்று உள்ளனரா என்றால் அரிது! மிக அரிது!
தொழில் துறையோடு, தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறைகளையும் ஆளும் மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்…
“தமிழை, முறையாக உச்சரிக்கும் தொலைக்காட்சிகளுக்கு 5 லட்சம் பரிசும் – விருதும் அளிக்கப்படும்” என அறிவித்ததை சம்பந்தப்பட்டவர்கள் ஆனந்தமாகக் கொண்டாடிவிட முடியாது. தமிழாய்ந்த பெருமகனின் மனம் கோணிய கோரிக்கையாகவே அதைக் கொண்டு குறுகியாக வேண்டும்.
அந்தக் கோரிக்கைக்கு ஆதாரப் பொறுப்பேற்க வேண்டியதாகிறது கல்வித் துறை. கல்வித் துறைக்கு ஆதாரமானவர்கள் ஆசிரியர்கள்.
பாரிய சம்பளத்தை பையில் போடும் அவர்களது நாவில் எழும் மெய்யான தமிழே எதிர்கால தமிழகத்துக்கு புகழ் சேர்க்க முடியும்.
ஆசிரியர்களின் நாவைச் சீர்படுத்தி வைக்க வேண்டியது துறை அமைச்சரின் கடமையாகும்.
தயவுசெய்து, ஆசிரியர்களை மேம்படுத்துங்கள்.
அவர்களுக்கான தனித்தமிழ் வகுப்புக்கு துணிந்து உத்தரவிடுங்கள். தகுதியற்றவர்களை எச்சரித்து மொழிகாக்க வலியுறுத்துங்கள். பாழரசியல் செய்வார்கள் என தயங்காதீர்கள். அதை மக்களிடம் விடுங்கள். அவர்கள் நல்லோர் பக்கமே நிற்பார்கள்.
காலமும் – தமிழும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் வல்லமை கொண்டதென வரலாறு நமக்குக் காட்டுகிறது.
அந்த வரலாற்றை இனிதாக்கும் வாய்ப்பு இன்று உங்களுக்கு இருக்கிறது. விட்டுக்கொடுத்து விடாதீர்கள்.
மொழிக்கு அழகே அதன் ஓசைதான். அது இன்று பாசை பிடித்துவிட்டதே!
அண்ணாவும் கலைஞரும் பேசிய அந்த செந்தமிழெங்கே?
திருவிக – மு.வ – தோழர் ஜீவா – தி.கோ.சீனிவாசன் – தமிழ்வாணன் – கண்ணதாசன் – ம.பொ.சி – கிருபானந்த வாரியார் – புலவர் கீரன் போன்ற எண்ணற்றோர் எழுச்சியுற பேசிய அந்த அழகு தமிழ் எங்கே?
கொச்சையாக பேசினாலும் வெற்றிகொண்டானின் தமிழும், சிங்கார சடையப்பனின் தமிழும் உச்சரிப்பில் பிழை கண்டதில்லையே!
இன்று சினிமா முதற்கொண்டு சோஷியல் மீடியா வரை பிழையான தமிழோடு அவலப்பட்டுக் கொண்டிருக்கிறதே. அத்துணைக்கும் காரணம் ஆரம்ப கல்விதானே!?
நானும் திராவிடன்தான் எனும் பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களின் நாவிலும் கூட தமிழ் எழவில்லையே. ‘தமில்’ என்றுதானே வருகிறது.
அப்படியான ‘தமில்’ தன்னை திருத்திக் கொள்ளாமல் அப்படியே தொடருமானால் வருங்காலம் என்னவாகும்? அந்த பாவம் நாளை துறை அமைச்சரான உங்கள் மேல்தானே விடியும்!?
விரைந்து, ஆவன செய்யுங்கள் அமைச்சரே!
“கற்க கசடற” என்கிறது திருக்குறள்.
கசடு என்பதற்கு, குறைபாடு – குற்றம் எனப் பொருள்படும்.
கசடோடு பேசப்படுவது பொய் மொழி.
கசடற்றதாம் பொய்யாமொழி!
செழிக்கட்டுமே – கொழிக்கட்டுமே நம் தமிழ்மொழி!
**கட்டுரையாளர் குறிப்பு**
**வே.ஸ்ரீராம் சர்மா -** எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.