முடிந்தால் பாஜகவைத் தோற்கடித்து மத்தியில் ஆட்சி அமையுங்கள் என்று இடதுசாரிகளுக்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சவால் விடுத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், சட்டத்தைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. எனினும் மத்திய அரசு மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் கேவடியாவில் நேற்று (பிப்ரவரி 29) நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், “என்னுடைய இடதுசாரி கட்சி நண்பர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். முடிந்தால் எங்களைத் தோற்கடித்து மத்தியில் உங்களுடைய ஆட்சியைக் கொண்டு வாருங்கள்.
மதச்சார்பின்மை, ஒற்றுமை மற்றும் மனித உரிமைகள் குறித்து எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமைகளைப் பற்றி இடதுசாரிகள் என்றைக்காவது பேசியிருக்கிறார்களா என்றால் ஒருபோதும் கிடையாது” என்று சாடினார்.
மேலும், “என்பிஆர் கணக்கெடுப்பு நடந்தால் நாங்கள் எந்தவித ஆவணங்களையும் காட்டமாட்டோம் எனச் சிலர் சொல்கிறார்கள். ஆனால், ராமர் அயோத்தியில் பிறந்தார் என்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உலகம் நம்புகிறது என்றபோதிலும் ராமர் பிறந்ததற்கான ஆதாரங்களைக் கேட்கிறார்கள். இதுதான் போலித்தன்மை” என்றும் குற்றம்சாட்டினார்.
**-எழில்**
�,