�நீக்க அதிகாரம் இல்லை: பன்னீர், எடப்பாடிக்கு நோட்டீஸ் அனுப்பிய நிர்வாகி!

Published On:

| By Balaji

சசிகலாவிடம் அலைபேசியில் பேசினார் என்பதற்காக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீருக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், சொந்த ஊரான எடப்பாடியில்தான் இது நடந்திருக்கிறது.

கடந்த ஜூன் 17ஆம் தேதி சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அவசரமாக கூடி சசிகலாவுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியது. இதேபோல ஒவ்வொரு மாவட்ட அதிமுகவிலும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அப்போது எடப்பாடி உத்தரவிட்டார். இதுபற்றி [சசிகலாவின் முதல் கூட்டம் எடப்பாடியில்: அவசரத் தீர்மானங்களின் பின்னணி]( https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/politics/2021/06/19/77/sasikala-first-meeting-in-edapadi-audio-release) என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

எடப்பாடி பழனிசாமிக்கு முன்னதாக சேலம் அதிமுகவில் குறிப்பாக எடப்பாடி தொகுதியில் வளர்ந்துகொண்டிருந்த பிரமுகர் சுரேஷ். எடப்பாடி தலையெடுத்த பிறகு கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். அவர் சசிகலாவிடம், ‘அம்மா 2011க்கு முன்னாடி எடப்பாடி பழனிசாமி கட்சியில எந்த பொறுப்புலயும் கெடையாதும்மா… அப்ப எம்.ஆர். ஐயாகிட்டயும் ராமச்சந்திரன்கிட்டயும் நான் தான் அழைச்சு வருவேம்மா. அவர் பேரையே நோட்டீஸ்ல போட மாட்டாங்கம்மா. அவர் பதவிக்கு வந்தவுடனே என்னை பத்தாண்டுக் காலம் நடுத்தெருவுல நிப்பாட்டினாரும்மா. அம்மா… லாக்டவுன் முடிஞ்சதும் முதல் கூட்டம் எடப்பாடியில நான் ஏற்பாடு செய்யுறேன்ம்மா… நீங்க வரணும்மா…’ என்றதும், ‘சரிப்பா…சரிப்பா…’ என்கிறார் சசிகலா.

இந்த ஆடியோவை எடப்பாடி பழனிசாமி கேட்ட பிறகுதான் எடப்பாடி பழனிசாமி உடனடியாக செம்மலை உள்ளிட்டோருக்கு போன் செய்து மாவட்ட அதிமுக கூட்டம் போட்டு அதில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் போட வேண்டும் என்று விவாதிக்கிறார். அதன் பிறகே அந்த ஏழு நிமிடக் கூட்டம் நடைபெற்றது, அதன் பிறகு இரு வாரங்கள் கழித்து ஜூலை 5ஆம் தேதி எடப்பாடி சுரேஷ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அந்த சுரேஷ் தான், நேற்று (ஜூலை 20) ஓ.பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். சுரேஷின் வழக்கறிஞர் தமிழேந்தி அனுப்பிய அந்த நோட்டீஸில்,

“எனது கட்சிக்காரான சுரேஷ் கடந்த 1991இல் இருந்து அதிமுகவில் உறுப்பினராக இருந்து வருகிறார். (எண் 22-178676). தொண்டராக கட்சியில் சேர்ந்து எடப்பாடி நகர 17ஆவது வார்டு பிரதிநிதியாகவும், 1998ஆம் ஆண்டு ஜெயலலிதாவால் சேலம் மாவட்ட மீனவரணி செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். இன்றுவரை அதிமுக உறுப்பினர் அட்டை வைத்திருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று நீங்கள் (ஓ.பன்னீர், எடப்பாடி) இருவரும் எடப்பாடி சுரேஷை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளீர்கள்.

அதிமுக கட்சிக்கு கடந்த 10-1-2017 இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 25-1-2017 அன்று 7ஆவது தேசிய வாக்காளர் தினம் டெல்லியில் நடைபெறுவதாகவும்,அந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறும் பொதுச் செயலாளர் என்ற முறையில் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையத்தால் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

ஆனால் 12-09-2017 அன்று தங்கள் இருவராலும் ஏற்பாடு செய்யப்பட்டு சென்னையில் நடைபெற்ற அதிமுகவில் பொதுக்குழுவில் சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி நீங்கள் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் கழக விதிகளில் இல்லாத பதவிகளை உருவாக்கிக்கொண்டு பொறுப்பு வகிக்கிறீர்கள். அந்த பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைத் தோற்றுவித்த எம்ஜிஆர் இயக்கத்தை ஆரம்பிக்கும்போதே கழக விதிகளை வகுத்துள்ளார். கழக விதி 43இன்படி பொதுச் செயலாளரை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

அதிமுக விதிகளின்படி தாங்கள் இருவரும் (பன்னீர், எடப்பாடி) வகிக்கும் பதவிகள் ஏதும் இல்லை. கழக விதிகளின்படி பொதுச் செயலாளர் மட்டுமே ஒருவரை கட்சியில் இருந்து நீக்க முடியும். தங்கள் இருவருக்கும் இல்லை.

மேலும் நீக்க அறிவிப்பில் என் கட்சிக்காரர் (எடப்பாடி சுரேஷ்) எவ்விதத்தில் கழகக் கட்டுப்பாட்டை மீறினார் என்றும், அவப்பெயரை உண்டாக்கினார் என்றும் கூறவில்லை. மேலும் தனிப்பட்ட முறையிலும் அவருக்கு விளக்கமாக எவ்விதமான அறிவிப்பையும் அனுப்பவில்லை.

மேலும் கழக விதிகள் 35 உட்பிரிவு 12இன்படி, பொதுச் செயலாளருக்குத்தான் ஒரு தொண்டரை நீக்குவதற்கான அதிகாரம் உள்ளது. தங்கள் இருவருக்கும் அதிகாரம் இல்லை. எனவே இந்த அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் ஜூலை 5 – 2021 அன்று எடப்பாடி சுரேஷை நீக்கியதாக கூறப்பட்ட அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும். இல்லையெனில் தகுந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

இதை பின்பற்றி நீக்கப்பட்ட பலரும் பன்னீருக்கும், எடப்பாடிக்கும் நோட்டீஸ் அனுப்பத் தயாராகிறார்கள் என்பதுதான் அதிமுகவில் இப்போது ஹாட்.

**-வேந்தன்**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share