ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்களில் சிசிடிவி கேமரா வைப்பது தனிநபர் உரிமைக்கு எதிரானது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த பயேல் பிஸ்வாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். திருச்சி தில்லை நகர், அண்ணா நகரில் குயின் ஆயுர்வேதிக் கிராஸ் ஸ்பா சென்டர் என்ற பெயரில் ஸ்பா நடத்த தடையில்லா சான்றிதழ் வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று (ஜனவரி 4) நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, “ஸ்பா தொழிலை முறைப்படுத்தச் சட்டம் இல்லாமல் இருந்தது. உரிமமும் பெற வேண்டியதில்லை. ஆனால் 2018இல் ஸ்பா தொழில் நடத்த கட்டாயம் உரிமம் பெற வேண்டுமென்று அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் மனுதாரர் உரிமை மற்றும் தடையில்லா சான்று கேட்டு வந்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் தொடர்பான வழக்கை விசாரித்த தனி நீதிபதி மசாஜ் மற்றும் தெரபி சென்டர்களில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தவும் அந்த கேமராக்கள் இயங்கும் நிலையில் இருப்பதை டிஜிபி உறுதி செய்யவும் உத்தரவிட்டிருந்தார் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது என்பது தனிநபர் உரிமையைப் பறிக்கும் செயலாகும். இது தனி உரிமை தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானதாக உள்ளது.
மசாஜ் சென்டர்களில் ஆட்கள் நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தலாம். இந்த விவகாரத்தில் தனிநபர் உரிமை பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரரின் மனுவை நான்கு வாரங்களில் பரிசீலித்து தடையில்லாச் சான்று வழங்க போலீஸார் முடிவு எடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டார்.
**-பிரியா**
�,