லதா மங்கேஷ்கர் மறைவு: இரண்டு நாள் துக்கம் அனுசரிப்பு!

politics

மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த லதா மங்கேஷ்கர் இன்று காலமானார். அவரது மறைவால் திரையுலகினரும் ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தி திரைப்பட உலகின் மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் (வயது 92) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களாக லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை சற்று சீரடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இன்று காலையில் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. அவரது உயிரைக் காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். மத்திய மந்திரி நிதின் கட்கரி அவசரமாக மருத்துவமனைக்கு விரைந்தார். லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.
பின்னர் சிறிது நேரத்தில் லதா மங்கேஷ்கர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டது. லதா மங்கேஷ்கர் உயிரிழந்து விட்டதாகவும், அவரது ஆன்மா அமைதியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அவரது சகோதரி உஷா மங்கேஷ்கர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டுக் காலம் வலம் வந்தவர் லதா மங்கேஷ்கர். இந்தி, தமிழ் உள்ளிட்ட 36 மொழிகளில் பல்லாயிரக்கணக்கான திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார். தமிழில் சத்யா படத்தில் ‘வளையோசை கலகலவென’ என்ற பாடலை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.

லதா மங்கேஷ்கருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா கடந்த 2001ஆம் வருடம் வழங்கப்பட்டிருந்தது. திரைத் துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதையும் 1989ஆம் ஆண்டு லதா மங்கேஷ்கர் பெற்றிருந்தார். 1999 நவம்பர் முதல் 2005 நவம்பர் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் லதா மங்கேஷ்கர் பதவி வகித்துள்ளார்.

லதா மங்கேஷ்கரின் உடல் மருத்துவமனையில் இருந்து மும்பையில் உள்ள அவரது வீட்டிற்கு மதியம் 12.30 மணியளவில் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர், மும்பை சிவாஜி பூங்காவில் இன்று மாலை 6. 30 மணியளவில் இறுதி மரியாதை நடைபெறும்., லதா மங்கேஷ்கரின் இறுதி மரியாதை முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், லதா மங்கேஷ்கர் மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

**பிரதமர்**
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில்,”நான் வார்த்தைகளில் சொல்ல முடியாத வேதனையில் இருக்கிறேன். அன்பான மற்றும் அக்கறையுள்ள லதா தீதி நம்மை விட்டுப் பிரிந்தார். அவர் நம் நாட்டில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் சென்றார். வரும் தலைமுறையினர் அவரை இந்திய கலாச்சாரத்தின் தலைசிறந்த வீராங்கனையாக நினைவு கூர்வார்கள். அவரது மெல்லிசை குரல் மக்களை மயக்கும் இணையற்ற திறனைக் கொண்டிருந்தது. லதா தீதியின் பாடல்கள் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்தின. பல தசாப்தங்களாக இந்திய திரைப்பட உலகின் மாற்றங்களை கண்டவர். திரைப்படங்களுக்கு அப்பால், அவர் எப்போதும் இந்தியாவின் வளர்ச்சியில் ஆர்வமாக இருந்தார். வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவைக் காண விரும்பியவர். லதா அவர்களிடமிருந்து எப்போதும் அளவற்ற அன்பு கிடைத்ததை நான் பெருமையாகக் கருதுகிறேன். அவருடனான உரையாடல்கள் என்றும் மறக்க முடியாதது. லதாவின் மறைவையொட்டி சக இந்தியர்களுடன் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

**குடியரசு தலைவர்**
லதா மங்கேஷ்கருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,” லதாஜியின் மறைவு உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களைப் போலவே எனக்கும் இதயத்தை உடைக்கிறது. இந்தியாவின் சாராம்சத்தையும், அழகையும் கொண்டு வரும் அவரது பரந்த பாடல்களில், தங்களது உள்ளுணர்வுகள் வெளிப்படுவதைத் தலைமுறைகள் கண்டுள்ளன. பாரத ரத்னா விருது வென்ற லதாஜியின் சாதனைகள் ஒப்பிட முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.

**தமிழ்நாடு முதல்வர்**
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில்,” இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் மறைந்த செய்தியால் மிகுந்த வேதனையடைகிறேன். எண்பதாண்டு காலம் பரந்து விரிந்ததான அவரது இசை வாழ்வில் தனது தேனையொத்த குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் அவர் வருடி சென்றுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இசை ஆர்வலர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
**ராகுல் காந்தி**
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில், “லதா மங்கேஷ்கர் மறைந்த சோக செய்தி கிடைத்தது. பல காலங்களாக இந்தியாவின் மிகவும் பிரியமான குரலாக இருந்தார். அவரது தங்கக் குரல் அழியாதது மற்றும் அவரது ரசிகர்களின் இதயங்களில் தொடர்ந்து எதிரொலிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

**இரண்டு நாள் துக்கம் அனுசரிப்பு**
புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் நினைவாக இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்கள் தேசிய துக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது. பாரத ரத்னா விருது பெற்றவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நாட்களுக்கு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

**-ராஜ், வினிதா **

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *