முன்னாள் ராஜ்யசபா உறுப்பினரும், முன்னாள் விழுப்புரம் அதிமுக மாவட்டச் செயலாளருமான டாக்டர் லட்சுமணன் இன்று (ஆகஸ்டு18) தனது ஆதரவு நிர்வாகிகளோடு அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
லட்சுமணனுக்கும் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கும் இடையே அதிமுகவில் நடந்து வந்த தொடர் மோதல்களால்தான் லட்சுமணன், திமுகவுக்கு வந்திருக்கிறார். அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் லட்சுமணன். 2017 ஆம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் தொடங்கியபோது அவரை ஆதரித்த முதல் மாவட்டச் செயலாளர் லட்சுமணன். அதிலும் விழுப்புரம் மாவட்டம் பெரிய மாவட்டமாக இருக்கும் நிலையில், லட்சுமணன் எடுத்த முடிவு அதிமுகவில் அப்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அந்த வகையில் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரித்த முதல் மாவட்டச் செயலாளரே இன்று திமுகவுக்கு போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இன்று திமுகவில் சேர்ந்த லட்சுமணன், கடைசியாக ஒரு முறை ஓரிரு நாள் முன்பு தனது ஆதரவாளர்களோடு ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்திருக்கிறார். தனக்கு விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட சரிவுகளை வரிசையாக அடுக்கியிருக்கிறார். **‘முதன்முதலில் உங்களை ஆதரித்த மாவட்டச் செயலாளர் நான். ஆனால் அணிகள் இணைந்தபிறகு அம்மா அளித்த மாவட்டச் செயலாளர் பதவி எனக்கு கிடைக்கவில்லை. ராஜ்யசபா எம்பியை மீண்டும் தருவதாக சொன்னீர்கள் அதுவும் நடக்கவில்லை. விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. சீட் கேட்டேன். அதுவும் எனக்கு தரப்படவில்லை. பெரிய மாவட்டங்களை பிரித்தபோது விழுப்புரத்தை பிரித்து எனக்கு ஒரு மாவட்டச் செயலாளர் தருவீர்கள் என்று எனது ஆதரவாளர்கள் நம்பியிருந்தார்கள். அதுவும் நடக்கவில்லை. இத்தனைக்கும் நீங்கள்தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்.** ஆனாலும் எனக்கும் எதுவும் என் ஆதரவாளர்களுக்கும் எந்த நன்மையும் கிடைக்கவில்லையே அண்ணே’ என்று சொல்லியிருக்கிறார்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்ட ஓ.பன்னீர் செல்வம், **‘லட்சுமணன். உங்களுக்கு வயசிருக்கு. அம்மாவின் ஆத்மாவை நம்பியிருப்போம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’** என்று சொல்லியிருக்கிறார்.
சரி என்று கேட்டுக் கொண்டு வெளியே வந்த லட்சுமணன் திட்டமிட்டபடியே இன்று திமுகவில் சேர்ந்துவிட்டார். “அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா, ஓ.பன்னீர்செல்வமா என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. முதல்வர் வேட்பாளர் என்று சொல்லப்படும் ஓ.பன்னீர்செல்வத்தை முதன் முதலில் ஆதரித்தவருக்கே இதுதான் கதி” என்று கூறுகிறார்கள் லட்சுமணனின் ஆதரவாளர்கள்.
**-வேந்தன்**
�,