பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியத்தை நிறுத்த உத்தரவிட்டது தொடர்பாக கருவூல ஆணையர் சமயமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வுக்குப் பிறகு அவர்களுக்கு வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுபோலவே, பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் அல்லது ஆசிரியர் அல்லது இறந்த ஓய்வூதியரின், குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதனிடையே கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் சமயமூா்த்தி அனைத்து மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் கருவூல அலுவலா்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில், “ஓய்வூதியதாரர்களின் வங்கிக் கணக்கில் 6 மாதங்களாக பணப் பரிவர்த்தனைகள் எதுவும் நடைபெறாவிட்டால் அது குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். அவர்களின் வங்கிக் கணக்கில் ஓய்வூதியம் செலுத்துவதை ரத்து செய்து, இதற்கு முன்பு செலுத்தியதை திரும்பப் பெற வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. கொரோனா காலமான இந்த நேரத்தில் ஓய்வூதியதாரர்கள் எப்படி வங்கிக்கு செல்ல முடியும் எனக் கேள்வி எழுப்பியதோடு, உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையும் ஓய்வூதியதாரர்கள் மத்தியில் எழுந்தது.
இந்த நிலையில் இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 19) விளக்கம் அளித்துள்ள கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் சமயமூா்த்தி, “6 மாத காலம் பணப்பரிவர்த்தனை இல்லாத ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியப் பணம் செலுத்துவது நிறுத்தப்படும் என்ற தகவல் உண்மையல்ல. வங்கிக்கணக்குகளை முடக்க உத்தரவிடவில்லை. 6 மாத கால பணப்பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகள் பற்றி கணக்கெடுக்க மட்டுமே அறிவுறுத்தப்பட்டது” என்று கூறினார். அத்துடன், பணப்பரிவர்த்தனை செய்யாத ஓய்வூதியதாரர்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் விளக்கினார்.
இது வழக்கமாக அனுப்பப்படும் சுற்றறிக்கைதான், இதனால் யாரும் எந்த அச்சமும் படத்தேவையில்லை என்ற சமயமூர்த்தி, “ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களின் இறப்புக்கு பிறகும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் ஓய்வூதியம் செலுத்துவதை தவிர்க்கவே இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதுதொடர்பாக இன்னொரு சுற்றறிக்கை அனுப்பப்படும்” என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.
உத்தரவில் ஓய்வூதியம் ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள நிலையில், ஆணையர் பணப்பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகள் பற்றி கணக்கெடுப்பு மட்டுமே செய்ய அறிவுறுத்தியதாக கூறியுள்ளார். ஆணையரின் வார்த்தைகளே உத்தரவாக இருந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் ஓய்வூதியதாரர்கள்.
**எழில்**�,