�
நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு என பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
2021 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக முகூர்த்த நாள் மற்றும் நல்ல நேரம் பார்த்து வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். நாளை (மார்ச் 19) வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள்.
இந்நிலையில் இன்று (மார்ச் 18) ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பு நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்சித் தொண்டர்கள் புடைசூழ, கலை நிகழ்ச்சி, கொண்டாட்டங்களுடன் திறந்தவெளி வாகனத்தில் ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்தலில் போட்டியிட எனக்கு கட்சியினர் ஊக்கமளிக்கின்றனர். அதுவே எனக்கு மிகப் பெரிய பலம்.
2019 மக்களவைத் தேர்தலில் 303 எம்.பி.களோடு பாஜக வெற்றி பெற்றது. அப்போது சிறுபான்மை மக்களும் வாக்களித்தனர். பாஜகவுக்குச் சிறுபான்மையினரின் ஆதரவு இல்லை என்று சொல்வது எதிர்க்கட்சிகளின் பொய்யான குற்றச்சாட்டு” என்றார்.
இதையடுத்து, ரஜினிகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்பீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ரஜினிகாந்த்திடம் நேராகச் சென்று ஆதரவு கேட்கவில்லை என்றாலும், அவருடைய ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு என பதிலளித்தார் குஷ்பு.
**-பிரியா**
�,”