திமுகவிலிருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்த கு.க. செல்வம், அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளிக்கும்போது, தான் பாஜகவில் இணையவில்லை என்றும் தொகுதி பிரச்சினைக்காகவே நட்டாவை சந்திக்க வந்ததாகவும் கூறினார்.
இதனையடுத்து, திமுக தலைமை கு.க. செல்வம் வகித்து வந்த பதவிகளில் இருந்து நீக்கியதோடு அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக ஏன் நீக்கக் கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த கு.க.செல்வம், திமுகவினர் மாற்றுக் கட்சியினரை சந்திக்கக் கூடாது என்று கட்சியின் எந்த சட்ட விதிகளிலும் சொல்லப்படவில்ல என்று கடிதம் எழுதினார்.
இதுதொடர்பாக [சட்டமன்றத்தில் பாஜக குரல்: கு.க. செல்வத்தின் விளக்கப் பின்னணி!](https://minnambalam.com/politics/2020/08/08/54/dmk-mla-selavm-sent-explain-to-dmk-head-command-notice) என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில், “ஒருவேளை திமுகவில் இருந்து நீக்கப்பட்டாலும், நீக்கப்படாவிட்டாலும் கு.க. செல்வத்தின் எம்.எல்.ஏ. பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. எனவே வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கு.க. செல்வம் பாரதிய ஜனதாவின் குரலாக ஒலிப்பார். இதை திமுக ஒன்றும் செய்ய முடியாது” என்று தெரிவித்திருந்தோம்.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 13) வெளியிட்ட அறிவிப்பில், “திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க. செல்வம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்துக்கு அளித்த பதில் ஏற்றுக் கொள்ளும்படி இல்லாத காரணத்தால், அவர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
திமுக வரலாற்றிலேயே அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் நிரந்தரமாக கட்சியிலிருந்து நீக்கப்படுவது இதுதான் முதல் முறை. கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் அடிப்படை உறுப்பினராக இணைந்தால் மட்டுமே கட்சித் தாவல் தடை சட்டத்தின் படி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். அதனால், நாம் மேலே சொன்னபடி சட்டமன்றத்தில் பாஜகவில் குரலாகவே ஒலிக்க இருக்கிறார் கு.க.செல்வம்.
**எழில்**
�,