கொரோனா தடுப்பு மருந்துகளை வழங்குமாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலகத்தில் 208 நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. உலக அளவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,056,159 ஆக இருந்து வருகிறது. 57,206 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து 3,374 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் கொரோனா சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மார்ச் 25ஆம் தேதி தடை விதித்தது. இதனால் இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை ஆர்டர் செய்திருந்த அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் தான் கேட்டதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று தொலைபேசியில் பேசினேன். கொரோனாவை ஒழிப்பதில் இரண்டு நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட ஒப்புக்கொண்டோம். அமெரிக்கா ஆர்டர் செய்திருந்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்குவது குறித்து தீவிரமாக பரிசீலிப்பதாக மோடி தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அதிகம் தயாரிப்பதாகவும், கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு அது தேவை என்றும் குறிப்பிட்ட டிரம்ப், “ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் அனுப்பினால் பாராட்டுவேன்” எனக் குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஆரோக்கியமான உரையாடலை மேற்கொண்டேன். மேலும் கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட இந்தியா-அமெரிக்க கூட்டாட்சியின் முழு பலத்தையும் பயன்படுத்த ஒப்புக்கொண்டோம்” என்று தெரிவித்தார்.
**எழில்**
�,